ETV Bharat / state

பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை? - திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 11:53 AM IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Trichy School children torture issue: பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் குழந்தைகளைத் துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை: திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியைச் சேர்ந்த கணேசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியை அடுத்து உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் எனது மூன்று குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சேர்த்தது முதல் தற்போது வரை பள்ளிக் கட்டணம், நன்கொடை உள்ளிட்ட இதர எந்த கட்டணமும் தாமதம் இன்றி முறையாக நான் செலுத்தி வந்துள்ளேன்.

குழந்தைகளின் இந்த வருட கல்விக் கட்டணமான 15 ஆயிரம் ரூபாயைச் செலுத்த பள்ளி நிர்வாகத்தில் இருந்து எனது செல்போனிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 24.1.2024 அன்று பள்ளியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எனது 3 குழந்தைகளையும், தேர்வு எழுத விடாமல் அவர்களது விடைத்தாள்களை பறித்து, மற்ற மாணவர்கள் முன்னிலையில் மன ரீதியாக அவமானப்படுத்தி, பள்ளி வளாகத்தில் காலை முதல் மாலை வரை மூன்று குழந்தைகளையும் நிற்க வைத்து, பள்ளி முதல்வரும், வகுப்பு ஆசிரியையும் கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.

இதனால் எனது மூன்று குழந்தைகளும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதைகளைச் சந்தித்துள்ளனர். எனது குழந்தைகளிடம் காரணம் குறித்து கேட்டபோது நடந்த சம்பவத்தை விளக்கினர். இதனால் 9ஆம் வகுப்பு படிக்கும் எனது மூத்த மகன், மன உளைச்சலால் தற்கொலை செய்ய முயற்சித்த பின் காப்பாற்றப்பட்டார்.

குழந்தைகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்திய பள்ளி முதல்வர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பள்ளி வகுப்பு ஆசிரியை சந்தனா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குழந்தைகள் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளதால் மனம் உடைந்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இது குறித்து புகார் அளித்தபோது திருச்சி மாவட்ட காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வாதிட்டார். அப்போது நீதிபதி, பள்ளி புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நீதிபதி பள்ளி திறப்பு குறித்தும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: மதுரை ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.