ETV Bharat / state

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 7:14 PM IST

senthil balaji case
செந்தில் பாலாஜி ஜாமீன் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

Madras High Court: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பு, நாளை (பிப்.28) வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத் தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில், "அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக உள்ள 30 வழக்குகளில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதற்காகவும், அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷமிட்டது, கரோனா விதிகளை மீறியது போன்ற அரசியல் காரணமாக தொடரப்பட்ட வழக்குகள். இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள 6 வழக்குகள் போஸ்டர் ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள்தான் நிலுவையில் உள்ளன. மேலும், கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வேலை வாங்கித் தருவதாக ரூ.67 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில், "2,900 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. சுமார் ரூ.67 கோடி வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்களாக உள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்எல்ஏவாக நீடிக்கிறார். ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால், தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து, அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிப்.21ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், நாளை (பிப்.28) செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "தமிழகத்தில் கடைசியாக நல்லாட்சி கொடுத்தவர் ஜெயலலிதா! எம்ஜிஆருக்கு எதிரான ஆட்சி நடக்கிறது"- பிரதமர் மோடியின் திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.