ETV Bharat / state

பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.11.72 லட்சம் மோசடி.. மதுரையைச் சேர்ந்த வாலிபர் சைபர் கிரைமில் சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 3:45 PM IST

Cybercrime issue
பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.11.72 லட்சம் மோசடி... மதுரை வாலிபர் சைபர் கிரைமில் சிக்கியது எப்படி

Cybercrime issue: தூத்துக்குடியில் வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி அதன் மூலம் பண மோசடி செய்தும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்ட விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி(47), இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு, வாட்ஸ்ஆப்பில் கடந்த 2023 அக்டோபர் 19ஆம் தேதியன்று, அடையாளம் தெரியாத ஒரு செல்போன் எண்ணிலிருந்து பகுதிநேர வேலை தொடர்பாக (Part time Job) குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்ம நபரை வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொண்டு, அதில் அவர் அனுப்பிய லிங்க் மூலம் டெலிகிராம் குழுவில் (Telegram Group) இணைந்தும், டாஸ்க் செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபரின் தூண்டுதலின்பேரில், வாவு யூவியாஸ் பாக்மி லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில், தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்கிற்கு மொத்தமாக ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்தைச் செலுத்தியுள்ளார்.

அதன்பின்னர், அந்த நபரிடம் இருந்து எந்தவிதப் பதிலும் வராததையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார். அதனையடுத்து, கடந்த 2023 நவம்பர் 22ஆம் தேதி, அந்த மர்ம நபர் ஜின்னாவின் வாட்ஸ்ஆப் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு, தனது பெயர் ஸ்ரீதர் என்றும், நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி, கடந்த நவம்பர் 22ஆம் தேதி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கிக் கணக்கிற்கு ரூ.20 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 14ஆம் தேதி ரூ.30 ஆயிரமும், டிசம்பர் 15ஆம் தேதி ரூ.9 ஆயிரத்தையும் அனுப்பியுள்ளார். இதனிடையே அந்த நபர் ஜின்னாவின் செல்போன் நம்பர் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு, அவர்களுடைய குடும்ப விபரங்களைப் பற்றிக் கூறி, அவர்களின் புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவு செய்துள்ளார்.

பின்னர், டிசம்பர் 20ஆம் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாகவும், சமூக வலைத்தளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்தும் தேசிய சைபர் கிரைம் பக்கத்தில் (National Cyber crime Reporting Portal) புகாரைப் பதிவு செய்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து, சைபர் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து, கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியில் விசாரணை மேற்கொண்டு, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினரிடம் பண மோசடி மற்றும் சமூக ஊடகம் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த நபர் மதுரை மாவட்டத்தில் உள்ள தத்தனேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஸ்ரீதர்(36) என்பதை கண்டு பிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (பிப்.20) மதுரை முடக்கு சாலை, கோச்சடை மெயின் ரோடு பகுதியில் வைத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க: மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.