ETV Bharat / state

"திருப்பூர் என்றால், பீனிக்ஸ் பறவை போன்று உழைத்து முன்னேறக் கூடிய மக்கள் இருக்கும் இடம்" - பாஜக அண்ணாமலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 4:03 PM IST

திருப்பூர் யாத்திரை
அண்ணாமலை

BJP Annamalai: திருப்பூரில் 233 வது மற்றும் 234 வது தொகுதிகளாக திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (பிப்.27) என் மண் என் மக்கள் யாத்திரையை நிறைவு செய்தார்.

அண்ணாமலை

திருப்பூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், யாத்திரை நிறைவு விழா, இன்று (பிப்.27) பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில், 232 தொகுதிகளில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவடைந்த நிலையில், 233 மற்றும் 234வது தொகுதிகளாக, திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளில் இன்று நடைப்பயணம் மேற்கொண்டார்.

திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைப்பயணத்தைத் தொடங்கினார். அவருக்குக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “திருப்பூர் என்றால், பீனிக்ஸ் பறவை (Phoenix) போன்று உழைத்து முன்னேறக் கூடிய மக்கள் இருக்கும் இடம். தமிழக அரசைப் புரட்டிப் போடக் கூடிய வகையில் இந்த யாத்திரை இருக்கும். அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் தேர்தல் இது. ஆனால், நமக்குத் தெரியாதது, பிரதமர் 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வரப்போகிறாரா அல்லது 450 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வரப்போகிறாரா என்பது தான்.

பிரதமர் மோடி மக்களைச் சந்திக்கும் கூட்டம் இது. எனவே, மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை புரிய வேண்டும். பாஜக வேல் யாத்திரையானது 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொடுத்தது. என் மண் என் மக்கள் யாத்திரை 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொடுக்கப் போகிறது” என்றார்.

இதனையடுத்து, திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தைக் கடந்து குமரன் சிலைக்கு மாலை அணிவித்து தனது என் மண் என் மக்கள் யாத்திரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை; அடிக்கல் நாட்ட உள்ள திட்டப் பணிகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.