தமிழ்நாடு

tamil nadu

குலசை தசரா திருவிழாவின் மகிஷா சூரசம்ஹாரம்

By

Published : Oct 6, 2022, 9:35 AM IST

பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற குலசை தசரா திருவிழாவின் மகிஷா சூரசம்ஹாரம்
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற குலசை தசரா திருவிழாவின் மகிஷா சூரசம்ஹாரம்

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி:உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்ததாக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு தசரா திருவிழா, கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவற்றில் மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாகச் சென்று பெற்ற காணிக்கையை கோயில் உண்டியலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.

பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற குலசை தசரா திருவிழாவின் மகிஷா சூரசம்ஹாரம்

இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மகிஷா சூரமர்தினி கோலத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு வந்தார். முதலில் தனது முகத்துடன் இருந்த மகிஷாசூரனை வதம் செய்த அம்மன், பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதம் செய்தார்.

தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூரனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மகிஷாசூரனையும் வதம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின. இந்த நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 48 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. குலசை தசராவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சுமார் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையும் படிங்க:குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்

ABOUT THE AUTHOR

...view details