தமிழ்நாடு

tamil nadu

குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: ஜேசிபி இயந்திரம் சிறைப்பிடிப்பு - பெண்கள் போராட்டம்!

By

Published : May 3, 2023, 5:58 PM IST

Dump yard
குப்பைக்கிடங்கு

திருவண்ணாமலை அருகே குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ஜேசிபி இயந்திரங்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பைக்கிடங்கு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள், ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும், நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து, குப்பைக் கிடங்கு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கு தேவனந்தல், புனல் காடு, கலர் கொட்டா உள்ளிட்டப் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்பகுதி குப்பைக்கிடங்கு அமைத்தால் விளைநிலம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

இந்நிலையில், புனல் காடு பகுதியில் குப்பைக் கிடங்கை அமைக்க கடந்த சில நாட்களாக நிலத்தை சமன் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இப்பணியில் ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அங்கு நகராட்சிக்கு சொந்தமாக குப்பைக் கிடங்கு அமைக்கப்படவில்லை என்றும், கிராம ஊராட்சிகளின் சார்பில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று (மே 3) ஜேசிபி இயந்திரங்களை சிறைப்பிடித்த கிராம மக்கள் குப்பைக்கிடங்கு அமைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பெண்கள் ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Chennai Airport: சென்னை புதிய விமான முனையத்தில் 2-வது முறையாக 3 விமானங்கள் சோதனை!

ABOUT THE AUTHOR

...view details