ETV Bharat / state

“மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண் OTP பெறுவது குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்துக” - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்! - School Education Dept Statement

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 10:55 PM IST

TN School Education Department Statement: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும், மாணவர்கள் இடைநிற்றலின்றி கல்வி பயில்வதைக் கருத்தில் கொண்டும் பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெ.குமரகுருபரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்ககம் சென்னை புகைப்படம்
பள்ளிக்கல்வி இயக்ககம் சென்னை புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தரப்பில் பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும், மாணவர்கள் இடைநிற்றலின்றி கல்வி பயில்வதைக் கருத்தில் கொண்டும், பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

14 வகையான மாணவர் நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நலத்திட்டங்கள் அனைத்தையும் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் அறிந்திருக்க, பெற்றோருக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக அவசியமானதாகும். இதனைப் பெற்றோரின் கைப்பேசி எண்களுக்கு, கல்வி மேலாண்மைத் தகவல் முகமை மூலமாகத் தகவல் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பினை செல்வனே மேற்கொள்ள வேண்டுமாயின், பெற்றோரின் சரியான கைப்பேசி எண்களைப் பெற்று கல்வி மேலாண்மைத் தகவல் முகமை தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும்.

இந்நிகழ்வில் ஏற்கனவே கல்வி மேலாண்மைத் தகவல் முகமையில் உள்ளீடு செய்து வைத்துள்ள பெற்றோரின் கைப்பேசி எண்களை மீண்டும் சரிபார்த்தல் வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் போது வழங்கிய கைப்பேசி எண்கள், தற்போது உரிய எண்கள் பயன்பாட்டில் இல்லாது இருப்பின், பெற்றோருக்குத் தகவல் சென்றடைவது சாத்தியமன்று. எனவே, பெற்றோரின் கைப்பேசி எண்களைச் சரிபார்க்கும் பணியானது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஏறக்குறைய 35 லட்சம் மாணவர்களின் பெற்றோருடைய கைப்பேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் சீருடைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளதால், இப்பணி துரிதமாக மேற்கொண்டு முடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இப்பணியினை எவ்வித சுணக்கமின்றி மேற்கொள்ளும் பொருட்டு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை நல்கி, தங்களது மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் துணை கொண்டு மாணவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு இது குறித்த விவரங்களை எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளத் தெரிவிக்கவும், பெற்றோரின் கைப்பேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் விவரம் குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்தி இப்பணியினை செய்து முடித்தல் வேண்டும்.

இப்பணியினை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பினை நல்கிடுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கு அளித்த கைப்பேசி எண்கள் 77 லட்சத்து 20 ஆயிரம் எண்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 46 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களின் கைப்பேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: “மூன்று நாட்கள் நீலகிரிக்கு சுற்றுலா வருவதை தவிர்க்கலாம்” - ஆட்சியர் எச்சரிக்கை! - NILGIRI DISTRICT COLLECTOR

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.