தமிழ்நாடு

tamil nadu

அமலாக்கத்துறையை வைத்து நில அபகரிப்பில் ஈடுபடும் பாஜக நிர்வாகி; மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 7:55 PM IST

Salem Farmers issue: சேலம் மாவட்டத்தில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி விவசாயிகளின் விளைநிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் பாஜக நிர்வாகியை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சேலத்தில் பாஜக நிர்வாகி மீது CPI(M) நிர்வாகிகள் புகார்
சேலத்தில் பாஜக நிர்வாகி மீது CPI(M) நிர்வாகிகள் புகார்

சேலத்தில் பாஜக நிர்வாகி மீது CPI(M) நிர்வாகிகள் புகார்

சேலம்:சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள் கிருஷ்ணன் மற்றும் கண்ணையன். இவர்களின் 6.5 ஏக்கர் விளைநிலத்தை சேலம் கிழக்கு மாவட்ட பாஜக பொறுப்பாளர் குணசேகரன் என்பவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினரும் பல முறை தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு, அவர்களது சாதியின் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் ஆகிய இரு விவசாயிகளின் விளை நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் பாஜக நிர்வாகி குணசேகரனை கைது செய்யக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை‌. சண்முகராஜா கூறுகையில், "அப்பாவி விவசாயிகள் நிலத்தை அபகரிப்பு செய்யும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் செயல்படுகிறார். அதற்கு துணைபோகும் அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத செயலுக்கு துணைபோன அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், நாளை (ஜன.3) காலை சேலத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜிப்சம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details