தமிழ்நாடு

tamil nadu

குடியரசு தின விழாவில் டாஸ்மாக்கிற்கு அதிக வருவாய் ஈட்டியதைப் பாராட்டி சான்றிதழ்; சர்ச்சையானதால் வாபஸ்

By

Published : Jan 27, 2023, 3:09 PM IST

அதிக வருவாய் ஈட்டியதை பாராட்டி சான்றிதழ்
அதிக வருவாய் ஈட்டியதை பாராட்டி சான்றிதழ்

குடியரசு தின விழாவில் மதுபான விற்பனையை அதிகரித்ததற்காக சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை உண்டாக்கியநிலையில், அவை திரும்பப் பெறப்பட்டது.

கரூர்: விளையாட்டு அரங்கில் நேற்று 74ஆவது இந்திய குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய, 330 அரசு ஊழியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிலையில் மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக டாஸ்மாக் விற்பனையாளர், இரண்டு மேற்பார்வையாளர், மாவட்ட மேலாளர் என 4 பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டனர். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள், அதிக மது விற்பனை செய்யும் நபருக்கு மட்டும் தான் விருதா? அதிகம் மது குடிக்கிறவங்களுக்கு எப்ப விருது கொடுப்பீங்க? என நடிகர் வடிவேல் போன் செய்து கேட்பதைப் போல, கிண்டலான மீம்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்தச் சூழலில் மாவட்ட நிர்வாகம் குடியரசு தின விழாவில், 'டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமைக்காக பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்று வழங்கப்படுகிறது' என சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், "குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் விருது வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்” எனத் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சர்ச்சையினை அடுத்து, அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதையும் படிங்க:விஐபி வரிசையில் சீட் இல்லை.. குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்பி!

ABOUT THE AUTHOR

...view details