தமிழ்நாடு

tamil nadu

ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்.. காரணம் என்ன?

By

Published : Jan 22, 2023, 1:18 PM IST

ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை திடீரென குஜராத் மாநிலம் புறப்பட்டுச் சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் குஜராத் பயணத்தால் ஈபிஎஸ் தரப்பு ஆட்டம் கண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்..

சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்தது முதல் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தலைமை வகிக்கும் மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவில் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி அனல் பறந்து காணப்படுகிறது. கடந்த முறை போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலிலிருந்து சூசகமாக விலகிய நிலையில், ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோரிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தல் வெற்றிக்காக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் தத்தம் தம் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இடைத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்தும் அந்த கட்சியின் ஆதரவைப் பெறவும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் தனித்தனியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று (ஜன.21) மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்று திடீரென சந்தித்தார். சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "பாஜக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும், சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

மாநில நலன் பற்றி விரிவாக மனம் விட்டு இருதரப்பினரும் பேசியதாகவும், இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் தேசிய நலன் கருதி ஆதரவு அளிப்பதாகக் கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.மேலும் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத பட்சத்தில் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்குமாறு அண்ணாமலையை ஓபிஎஸ் தரப்பு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. இதன் மூலம் பாஜகவை பயன்படுத்தி ஈபிஎஸ் அணியை எதிர்கொள்ள வியூகங்களை ஓபிஎஸ் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கம் நடத்தும் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் ஓபிஎஸ் சென்றதாக கூறப்படுகிறது. ஓபிஎசுடன், மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்தனர். குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை அந்த கட்சியின் தலைமையிடம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என கூறப்படுகிறது. அதனால் இந்த சந்திப்பினிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தமது தரப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கோருவார் எனக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்சின் திடீர் குஜராத் பயணம் ஈபிஎஸ்க்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; எந்த கூட்டணியில் யார் யார்?

ABOUT THE AUTHOR

...view details