தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு இடைத்தேர்தலில் இளங்கோவனுக்கு வெற்றி நிச்சயம் - திமுக அமைச்சர்கள் பேட்டி

By

Published : Jan 25, 2023, 8:58 PM IST

ஈரோடு இடைத்தேர்தலில்; இளங்கோவனுக்கு வெற்றி நிச்சயம்- திமுக அமைச்சர்கள் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வெற்றி நிச்சயம் என திமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தலில் இளங்கோவனுக்கு வெற்றி நிச்சயம் - திமுக அமைச்சர்கள் போட்டி

ஈரோடு: ஈரோட்டில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, ஏ.வ.வேலு, செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் முத்துசாமி பேசும் போது, 'ஈரோட்டில் நாங்கள் ஐந்து நாட்களாக வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் துக்கம் கலந்த வரவேற்பு அளித்தார்கள். திருமகன் ஈவெரா இழப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒன்றரை ஆண்டுகளில் திருமகன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். திருமகன் இறப்பு செய்தியைக் கேட்டதும் முதலமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஈரோடு கிளம்பி வந்து இறுதி மரியாதை செலுத்தினார். திருமகன் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவர் தங்கி இருந்த கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா வீதி எனப்பெயர் மாற்றினார்.

இளங்கோவன் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளராக உள்ளார். திருமகன் இந்த தொகுதியில் என்னென்ன செய்ய நினைத்தாரோ அதனை கண்டிப்பாக இளங்கோவன் செய்து காட்டுவார். ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்பு அமைச்சர் ஏ.வ. வேலு பேசியபோது, 'இடைத்தேர்தல் என்றால் முன்பு ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே போட்டி வலுவாக இருக்கும். தற்போது நிலை மாறிவிட்டது. இளங்கோவனும் நானும் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறோம். இளங்கோவனுக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள உறவை பிரிக்க முடியாது. இளங்கோவனை பல ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். திருமகன் செய்ய நினைத்த பணிகளை இளங்கோவன் கண்டிப்பாக செய்வார்' எனக் கூறினார்.

இறுதியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும் போது, 'நான் வேட்பாளர் என்றாலும் கூட உண்மையான வேட்பாளர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் முத்துசாமி தான். என் மகன் செய்த பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் போட்டியிட ஒத்துக்கொண்டேன். என் மகன் இந்த தொகுதி வளர்ச்சிக்காக கடந்த ஒன்றரை வருடமாக கடுமையாக உழைத்துள்ளார். என் மகனுக்கு அமைச்சர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் அமைச்சர் முத்துசாமி போட்டியிடுவதாக இருந்தது. நான் அமைச்சர் முத்துசாமியிடம் என் மகனுக்காக தொகுதியை கேட்டவுடன் அவர் சிறிதும் யோசிக்காமல் இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தார். வெற்றி வாய்ப்பு அவருக்கு இருக்கிறது என்று தெரிந்தும் கூட நான் கேட்டதற்காக இந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார். இந்த மனது யாருக்கும் வராது.

என் மகன் தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்துள்ளார். போர் வீரராக இருந்து தமிழ்நாட்டை நமது முதலமைச்சர் காத்துக் கொண்டிருக்கிறார்’ என்றார். இதனைத் தொடர்ந்து திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:அமைச்சர் நாசரின் செயல் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்: CM-க்கு ஓபிஎஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details