தமிழ்நாடு

tamil nadu

குடையை ரெடியா வையுங்க மக்களே.. அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

By

Published : Mar 21, 2023, 2:13 PM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 25ஆம் தேதி வரை, ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rain
Rain

சென்னை:தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 17ஆம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த ஓரிரு நாட்களாக சென்னையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

அதேபோல் வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வேலூரில் நள்ளிரவில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சேலம் மாவட்டத்திலும் ஓமலூர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டியது. அடர் வெண்ணிறத்தில் பெரிய அளவில் பனி மழை போல ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனை பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(மார்ச்.21) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் ஹில்ஸ், புழல், மாதவரம் - சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12 ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த அண்ணா நகர் டவர்.. புதுப்பொலிவுக்கு தயாராகும் விக்டோரியா அரங்கம்!

ABOUT THE AUTHOR

...view details