ETV Bharat / state

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது திருச்சி சூர்யா சிவா பரபரப்பு புகார்! - trichy Surya Siva

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 7:11 PM IST

Surya Siva complaint against Savukku Shankar: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாஜக சூர்யா சிவா திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சவுக்கு சங்கர், திருச்சி சூர்யா சிவா புகைப்படங்கள்
சவுக்கு சங்கர், திருச்சி சூர்யா சிவா புகைப்படங்கள் (credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி சூர்யா சிவா செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: யூடியூபர் சவுக்கு சங்கர் தேவர் ஜெயந்தியைப் பற்றியும், முக்குலத்தோர் சமூகத்தினைப் பற்றியும் இழிவான கருத்துக்களை யூடியூபில் பதிவு செய்துள்ளதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக ஓபிசி அணி சார்பில், மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா இன்று (வியாழக்கிழமை) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திருச்சி சூர்யா சிவா பேசியதாவது, “முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை அவமானப்படுத்தும் விதமாகவும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிபோதையில் இருப்பதாகவும் இழிவான கருத்துக்களைப் பேசி சவுக்கு சங்கர், தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவலர்களையும், பெண்களையும் இழிவாகப் பேசியதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 35 புகார்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்குலத்தோர் சமூகத்தைப் பற்றி இழிவாக பேசியதற்காக கோவையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் புகழை பாதுகாப்பது ஓபிசி அணியின் கடமை என்பதால், சவுக்கு சங்கர் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிளாம்பாக்கம் விவகாரம்.. சவுக்கு சங்கரை காவலில் எடுக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் முடிவு..? - Savukku Shankar Issue

சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேர்மையான அதிகாரி. ஆனால், சவுக்கு சங்கர் சந்தர்ப்பமாக பல இடங்களில் பகையை சம்பாதித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கைக்கூலியாக செயல்பட்டு, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி குறித்து எத்தனை வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாது.

மேலும், கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியுடன் நீண்ட நாள் சவுக்கு சங்கர் பயணித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் மரணத்தில் காரை ஓட்டி வந்த மல்லிகா நல்லுசாமி சவுக்கு சங்கரின் நண்பர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பலவற்றை நிறுத்தி வைத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் நீண்ட நாள் பயணித்திருப்பதால், அவர் குறித்த ரகசியங்கள் அறிந்திருப்பதால் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், சிறையில் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது சவுக்கு சங்கர் உயிர் மீது அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது.

மேலும், தேவர் ஜெயந்தியின் போது ஆர்.பி.உதயகுமார் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை இழிவுசெய்த சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக சவுக்கு சங்கர் இவ்வாறு செயல்படுகிறார். எனவே, சவுக்கு சங்கர் மீதும், சவுக்கு யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு சூர்யா சிவா குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: “முதலமைச்சரை ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது”.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கருத்து! - Savukku Shankar Goondas Act

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.