மேளதாளம் முழங்க அரசு பள்ளிக்கு கல்விச்சீர் சுமந்த பெற்றோர்கள்!

By

Published : Apr 14, 2023, 10:33 AM IST

thumbnail

மதுரை: மேளதாளம் முழங்க மதுரை அருகே உள்ள அரசுப்பள்ளிக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரூ.2 லட்சம் மதிப்பிலான அடிப்படைக் கட்டமைப்பு பொருட்களைச் சீர்வரிசையாகச் சுமந்து வந்து தலைமை ஆசிரியரிடம் வழங்கியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகருக்கு உட்பட்ட மேலூர் செல்லும் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது, உத்தங்குடி எனும் ஊர். இங்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அவ்வூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், உத்தங்குடி ஊர் பொதுமக்கள் சார்பாக இந்தப் பள்ளிக்குத் தனியார் நிறுவனத்தின் உதவியோடு கல்விச்சீர் வழங்கும் திருவிழா இன்று நடைபெற்றது. பொதுமக்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் ஒன்று சேர்ந்து மேளதாளம் முழங்க, பள்ளிக்குத் தேவையான அலமாரி, நாற்காலி, மேஜை, புத்தகங்கள், குறிப்பேடுகள், சமையல் பாத்திரங்கள், குடங்கள் மற்றும் கணினி என ரூ.2 லட்சம் மதிப்பிலான அடிப்படைக் கட்டமைப்பு பொருட்களைச் சீர்வரிசையாகச் சுமந்து கொண்டு பள்ளியின் ஆசிரியர்களிடம் வழங்கினர்.

இந்த நிகழ்வில், 'கிழக்குச் சீமையிலே' படப் பாடலான 'தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி' எனும் பாடல் ஒலிக்க, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மீது மாணவ, மாணவியர் மலர்தூவி வரவேற்று மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து உற்சாகத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: ராஜபாளையம், ராமேஸ்வரம்: கரிம மாசு இல்லாத நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.