சபர்மதி ஆற்றில் உலகக் கோப்பையுடன் போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்!
குஜராத்: 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (நவ. 19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 240 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியது. அதன்பின், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடத் தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 120 பந்துகளுக்கு 137 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6வது முறையாக ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் 6வது முறையாக உலகக் கோப்பை வென்றதை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சபர்மதி ஆற்றில் படகில் உலகக் கோப்பையுடன் இருப்பது போன்ற பதிவினை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது, "இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இறுதிப் போட்டியிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அவுட் ஆனது மனநிறைவைத் தந்தது. அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் மைதானம் அமைதியாக இருந்ததையும் உணர்ந்தேன்" என்றார்.