ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு - மம்தா பானர்ஜி இரங்கல்! - West Bengal lightning death

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 10:43 PM IST

Malda lightning death: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாவட்ட நிர்வாகம் உதவிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மின்னல் தொடர்பான கோப்புப்படம்
மின்னல் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat)

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இந்த நிலையில், மின்னல் தாக்கியதில் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சிலர் மின்னல் தாக்கிய நேரத்தில் மாம்பழம் பறிப்பதற்காக வயலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்படி, சந்தன் சஹானி (40), ராஜ் மிரிதா (16), மனோஜிட் மண்டல் (21) ஆகியோர் பழைய மால்டா பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அதேபோல், அதினா பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவர் ஆஷித் சாஹா மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். அதேநேரம், இங்கிலீஷ்பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஷோபாநகர் கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் மண்டல் (28) மற்றும் ஸ்வேதாரா பீபி (39) என்ற பெண் இறந்துள்ளார். இதனையடுத்து, ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மின்னல் தாக்கத்தால் மால்டாவில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடம் என் மனம் இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் உள்ளன. அவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் அயராது உழைத்து வருகிறது. தேவைப்படுபவர்களுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து மால்டா மாவட்ட மாஜிஸ்திரேட் நிதின் சிங்கானியா கூறுகையில், “ஒவ்வொரு வட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையை தற்போது உறுதியாக கூற முடியவில்லை. தேடுதல் வேட்டை தற்போதும் நடைபெற்று வருகிறது. உடற்கூறாய்வு செய்யும் பணி இரவிலும் சிறப்பு அனுமதியோடு நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவகாசி அருகே இடி தாக்கி ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் படுகாயம்! - Lightning Strike Died In Sivakasi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.