ETV Bharat / sukhibhava

குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பை சரி செய்யும் - பாட்டி வைத்தியம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 8:51 PM IST

குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம்
குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம்

Home remedies for foot crack in tamil: குளிர்காலத்தில் தோலில் வறட்சி ஏற்படுவதால், பெரும்பாலானோருக்கு அதிகளவிலான பாதவெடிப்பு ஏற்படும். இந்த பிரச்சனையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

சென்னை: மற்ற பருவ காலங்களுடன் ஒப்பிடுகையில், மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அதிகமாகப் பாதவெடிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு எல்லா காலங்களிலும் பாதவெடிப்பு இருக்குமெனில் அவர்களுக்கு, குளிர்காலத்தில் பாதவெடிப்பு அதிகமாகிறது. சிலருக்கு அதிலிருந்து ரத்தக்கசிவு, கடுமையான வலி போன்றவையும் ஏற்படுகின்றன. எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றும், இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

பாத வெடிப்பு எதனால் ஏற்படுகிறது: நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பது, ஹார்ஷான சோப்புகள், க்ரீம்கள், பயன்படுத்துவது, குளிர்ந்த காலநிலை, போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவற்றால் பாதவெடிப்பு ஏற்படுகிறது. இது மட்டுமில்லாமல் உடல்பருமன், நீரிழிவு நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றாலும் குதிகால்களில் பாத வெடிப்பு ஏற்படுகிறது.

பொதுவாக இந்த பிரச்சினை பலர் தேங்காய் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி (Vasaline) போன்றவற்றைப் பயன்படுத்துவர். இதனால் தற்காலிகமாகப் பாதவெடிப்பு சரியாகும். நிரந்தரமாகச் சரிசெய்வதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இப்போது பாதவெடிப்பை நிரந்தரமாக போக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

பாதத்திற்கு ஸ்க்ரப்: முகத்திற்கு அடிக்கடி க்ளன்ஸ், ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை நீக்குவது போல, கால்களுக்கு பேக்குகள் போடுவதற்கு முன்பு பாதத்தில் உள்ள இறந்த செல்களை ஸ்க்ரப் செய்து நீக்க வேண்டும். இதற்கு மிதமான சூடு உள்ள வெந்நீரில், சிறிதளவு ஷாம்பு சேர்த்து, அதில் உங்கள் பாதங்களை 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பாதத்தின் சருமம் மென்மையான பிறகு, பியூமிஸ் ஸ்டோன் (Pumice Stone) வைத்து பாதங்களில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர இறந்த செல்கள் முற்றிலுமாக நீங்கி விடும்.

1. வேம்பு மஞ்சள் பேக்: ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும், அதில் 3 தேக்கரண்டி மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலக்கவும். பின் இந்த கலவையைக் குதிகாலில் தடவி, அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவி, காய்ந்த பிறகு ஏதேனும் மாய்ஸ்சரைசர் தடவவும். இவ்வாறு செய்து வர நாளடைவில் பாத வெடிப்பு குணமடையும்.

கிருமிநாசினியான மஞ்சள் மற்றும் வேப்பிலை பாத வெடிப்புகளை மறையச் செய்வதோடு, பாதவெடிப்பினால் ஏற்படும் வலியையும் சரி செய்கின்றன.

2. ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு பேக்: ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் கிளிசரின், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து பாத வெடிப்பு மேல் பேக் போட்டு வர, பாத வெடிப்பு படிப்படியாகக் குணமடையும்.

எலுமிச்சை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை மென்மையாக்கி பாத வெடிப்பை மறையச் செய்யும்.

3. அரிசி மாவு, தேன் பேக்: மூன்று டீஸ்பூன் அரிசி மாவில், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து பாதங்களில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் பாதங்கள் பளபளவென்று இருக்கும். உங்கள் பாதங்கள் மிகவும் வறண்டு இருக்குமெனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி மாவிற்கு பழைய செல்களை புதுப்பிக்கும் தன்மை உள்ளதால் பாத வெடிப்பு விரைவில் மறையும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன்களைக் காணலாம்.

இதையும் படிங்க: நைட் ப்ரஷ் பண்ணலன்னா இதய நோய் வருமா?... இத முதல்ல தெரிஞ்சுகோங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.