ETV Bharat / state

மாநில அளவிலான கைத்தறி ரக வடிவமைப்பு போட்டி - கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 9:46 PM IST

Etv Bharat
Etv Bharat

Handloom Design Competition: மாநில அளவிலான கைத்தறி ரக வடிவமைப்புப் போட்டிக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வடிவமைப்பு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்: மாநில அளவிலான கைத்தறி ரக வடிவமைப்புப் போட்டிக்கு, இளம் கைத்தறி வடிவமைப்பாளர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வடிவமைப்பு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இளம் தலைமுறையினர் இடையே கைத்தறி ரகத்தின் மீதான பிணைப்பை ஏற்படுத்திடவும், மாறிவரும் நவீன சந்தையின் தேவையை அறிந்து புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும், கைத்தறி ரகங்களில் புதுமையைப் புகுத்தி விற்பனையை அதிகரிக்கவும், மாநில அளவில் இளம் கைத்தறி வடிமைப்பாளர்களிடம் இருந்து சிறந்த வடிவமைப்புகள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.

இதையொட்டி, தமிழகத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், ஜவுளி தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், வடிவமைப்பாளர்களுக்கு இடையே போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டித்தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்களின் தகுதி, வடிவமைப்புகளில் உள்ள துணை வகைகள், விதிமுறைகள், வடிவமைப்பு நுழைவு நிபந்தனைகள் போன்றவைகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன. மேலும், வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப்படிவம், வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் உள்ளன.

அந்த வகையில், இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடம் இருந்து, மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான பங்கேற்பாளர்கள், டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட சரக துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநரிடம் வடிவமைப்பு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சேலம் மனநல மருத்துவர் மீது தாக்குதல்: தமிழ்நாடு மனநல மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.