ETV Bharat / state

ஈடிவி பாரத் எதிரொலி; மாக்கம்பாளையம் வழித்தடத்தில் புதுப்பொலிவுடன் அரசுப் பேருந்து.. மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்! - Makambalayam Govt Bus refurbished

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 6:59 PM IST

ETV Bharat impact: மாக்கம்பாளையம் மலைக்கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தின் அவல நிலை குறித்து கடந்த மே 14ஆம் தேதி ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டதை அடுத்து, இன்று அரசுத் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, புதுப்பொலிவுடன் பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சீரமைக்கப்பட்ட அரசுப் பேருந்து
சீரமைக்கப்பட்ட அரசுப் பேருந்து (Photo credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மலைக்கிராமம் மாக்கம்பாளையம். இக்கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தின் அவல நிலை குறித்து, கடந்த மே 14ஆம் தேதி ஈடிவி பாரத் இணையதளத்தில் செய்தி வெளியானது.

அந்த பேருந்தில் பயணிகள் இருக்கை, கைப்பிடி கம்பி, சேதமடைந்த மேற்கூரை, கயிறால் கட்டிய நிலையிலிருந்த இருக்கை என அரசுப் பேருந்தின் அவல நிலைகளை வீடியோவுடன் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த செய்தியின் எதிரொலியாக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, மாக்கம்பாளையம் மலைக்கிராமத்திற்கு இயக்கப்படும் பேருந்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு, பேருந்து முழுவதும் புதிதாக பெயிண்ட் அடித்து, புதுப்பொலிவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அரசுப் பேருந்தின் முந்தைய நிலை: சத்தியமங்கலத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள மாக்கம்பாளையம் மலைக்கிராமத்துக்கு தினந்தோறும் இரு முறை அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மருத்துவ சேவை, அரசு சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சத்தியமங்கலம் வருவதற்கு இந்த பேருந்தை நம்பிதான் உள்ளனர்.

இந்த நிலையில், பேருந்தின் இருக்கை, கைப்பிடி கம்பி, தரைதளம் மற்றும் மேற்கூரை என அனைத்தும் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. மாக்கம்பாளையம் கிராமத்துக்கு வேறு எந்த பேருந்தும் இயக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அவல நிலையில் இருந்த பேருந்தில் பயணிக்க அச்சத்தில் இருந்து வந்தனர்.

மேலும், மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் திரும்பும்போது பழுதடைந்த கைப்பிடி கம்பியை பிடிக்கும் போது சாய்ந்து விழும் நிலை ஏற்படுவதாகவும், வேகத்தடைகளில் ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வால் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் என பலர் பெரும் சிரமத்துக்கு ஆளானதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

முன்னதாக, அடர்ந்த வனப்பகுதியில் இயக்கப்படும் இப்பேருந்தின் நிலையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது, அந்த அரசுப் பேருந்தின் நிலை சரி செய்யப்பட்டுள்ளது மலைக்கிராம மக்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வனப்பகுதியில் தினந்தோறும் திக் திக் பயணம்: மாக்கம்பாளையம் பேருந்து பயணிகள் அவல நிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.