ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் இருந்த குழந்தை மாயம்.. 8 மணிநேரத்தில் மீட்ட காவலர்களுக்கு பாராட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 10:43 PM IST

Etv Bharat
Etv Bharat

North Zone IG: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை கடத்தப்பட்ட 8 மணிநேரத்தில் குழந்தையை மீட்ட 37 காவல் துறையினருக்கு வடக்கு மண்டல ஐஜி என்.கண்ணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் அளித்து பாராட்டினார்.

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலாவுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இவர் கருத்தடை செய்வதற்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை மாலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியைச் சேர்ந்த பத்மா (31) என்பவர், சூரியகலாவின் ஆண் குழந்தையைச் கடத்திச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து உடனடியாக வேலூர் உள்பட 5 மாவட்ட காவல் துறையினர், விரைவான நடவடிக்கை மேற்கொண்டு சிசிவிடி கேமரா காட்சிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து 8 மணி நேரத்தில் கடத்திச் செல்லப்பட்ட குழந்தையை காஞ்சிபுரத்தில் மீட்டனர். அத்துடன், குழந்தையை கடத்திச் சென்ற பத்மா, அவரது கணவர் திருநாவுக்கரசு ஆகியோரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: காணாமல்போன ஆவணங்கள் குறித்து புகாரளித்த அறிக்கை பெறுவதில் சிக்கல் ஏன்? - காவல்துறை விளக்கம்

இந்த குழந்தை மீட்புப் பணியில் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) எஸ்.பாஸ்கரன், வேலூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இ.திருநாவுக்கரசு, உதவி காவல் கண்காணிப்பாளர் வி.பிரசன்னகுமார், வேலூர் கிராமிய வட்ட ஆய்வாளர் பார்த்தசாரதி, வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 37 காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் திறம்பட செயலாற்றி 8 மணிநேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த 37 காவல் துறையினருக்கும் வடக்கு மண்டல காவல் தலைவர் (ஐஜி) என்.கண்ணன் இன்று (ஆகஸ்ட் 24) வேலூரில் வெகுமதி மற்றும் சான்றிதழை அளித்து பாராட்டினார்.

அப்போது, வேலூர் சரக காவல் துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண்ஸ்சுருதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 'மைசூர் பேட்டா' அணிவித்து வாழ்த்து கூறிய சித்தராமையா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.