ETV Bharat / state

‘தமிழர்கள் எங்கு இருந்தாலும் தமிழ் மண்ணை நேசியுங்கள்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

author img

By

Published : Jul 17, 2023, 7:48 PM IST

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழர்கள் உலகம் முழுவதும் எங்கு இருந்தாலும் தமிழ் மண்ணை நேசியுங்கள், உங்கள் கிராமங்களுக்கு எதாவது அரசாங்கத்துடன் இணைந்து உதவி செய்யுங்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டுக்கொண்டார்.

தமிழர்கள் எங்கு இருந்தாலும் தமிழ் மண்ணை நேசியுங்கள்

வேலூர்: அப்துல்லாபுரத்தில் இலங்கை தமிழர்களுக்காக அரசு சார்பில் 220 வீடுகள் கட்டப்பட்டு வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை தமிழ்நாடு சிறுபான்மைதுறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களுடன் அனைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

பின்னர், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் சிறுபான்மை நலத்துறை ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு, மேயர் சுஜாதா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், “சிறுபான்மை மக்களுக்காக தமிழ்நாடு தொடர்ந்து பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மசூதிகள் மற்றும் தேவாலயங்களை சரிசெய்ய தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது” என்றார்.

முன்னதாக, இலங்கை தமிழர் புதிய குடியிருப்புகளை ஆய்வு செய்த பின்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இலங்கை தமிழர்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து மத்திய அரசு மறைமுகமாக பல கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் பாதிப்பு எற்பட்ட பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 174 கோடி ரூபாய்க்கு அரிசி உள்ளிட்டவைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

இங்குள்ள 106 இலங்கை தமிழர் முகாம்களுக்கும் தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது. இலங்கை மக்கள் சுய உதவி குழுக்களுக்கான ஷெட்கள் அமைக்க உள்ளோம். இலங்கை மக்களுக்கு எந்த நாட்டிலும் பாதுகாப்பு இல்லை, தமிழ்நாட்டில் தான் உள்ளது. இலங்கை தமிழர் இளைஞர்களை திசை திருப்பி தேவையற்றவைகளை செய்தது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியினருக்கு இலங்கை தமிழர் இளைஞர்கள் திருந்தி விழிப்பு பெற்றது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பாதிப்பாக இருகிறது.

இலங்கை தமிழர்களுக்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என நாம் தமிழர் கூறுவது அப்பட்டமான பொய். திராவிட இயக்கம் உணர்வு பூர்வமான இயக்கம், நாங்கள் உணர்வுடன் செயல்படுகிறோம். இலங்கை தமிழர் பிள்ளைகளை பொறியியல், செவிலியர் உள்ளிட்ட படிப்புகளை படிக்க வைக்கின்றோம். தமிழர்கள் உலகம் முழுவதும் எங்கு இருந்தாலும் தமிழ் மண்ணை நேசியுங்கள் உங்கள் கிராமங்களுக்கு எதாவது அரசாங்கத்துடன் இணைந்து உதவி செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நீ சரியில்லை, மூட்டை கட்டிக்கொண்டு போ - விளையாட்டு அலுவலரை காட்டமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.