ETV Bharat / state

சென்னை ஐஐடியில் சர்வதேச கலாச்சார மாநாடு; தமிழரின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை சேர்க்க நடவடிக்கை - ஐஐடி இயக்குனர் தகவல்! - IIT Madras

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 5:40 PM IST

IIT Madras: சென்னை ஐஐடியில் மே 20ஆம் தேதி முதல் 26 வரை நடைபெறும் சர்வதேச கலாச்சார மாநாட்டில், வெளிநாடுகளில் இருந்து 1,500 பேரும், புகழ்பெற்ற கலைஞர்களும் வருகை தருகின்றனர் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை ஐஐடியில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9வது மாநாடு, வருகிற மே 20 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் 25 பயிற்சி பட்டறைகள், 70 கலைகளைச் சார்ந்த கலைஞர்கள், வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் பங்கேற்போர் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நெறிமுறைகள் ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், சிறந்த கலைஞர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பங்கேற்போருக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.

இது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறும்போது, “9வது ஆண்டாக நடைபெறும் இம்மாநாட்டை சென்னை ஐஐடி ஏற்கனவே 1996, 2014 ஆகிய இரு ஆண்டுகளில் நடத்தியுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக சென்னை ஐஐடியில் நடைபெற உள்ளது. 250 கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். 1500 பேர் வரை வெளிநாட்டு மாணவர்கள் இதில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள முக்கிய சிறந்த கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 26 பயிற்சி அரங்குகள் நடத்தப்பட உள்ளது. இசை மட்டுமின்றி இந்திய கலாச்சாரத்தை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடக்க உள்ளது. காந்தியின் படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பொம்மலாட்டம், நடனம் உள்ளிட்டவையும் உள்ளது. சிக்கிம், மேற்கு வங்காளம் சார்ந்த புதுமையான சிறப்பான அரிதான இசைகள் கொண்டு வரப்பட உள்ளன.

25 ஆம் தேதி இரவு 8:30 மணி முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை தொடர் நிகழ்ச்சி பத்ம விருதுகள் பெற்ற கலைஞர்கள் நடத்துகின்றனர். 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவக்க நிகழ்ச்சி நடக்க உள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கிறார். காலை முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கொண்டு வந்தது போல், வரும் ஆண்டுகளில் கலாச்சார கலை பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வர ஏற்பாடு செய்ய திட்டம் உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளை இன்னும் ஆறு நாட்களுக்குள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்தவர்களை தவிர கூடுதலாக 2 ஆயிரத்து 500 இடங்கள் வரை உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த நிகழ்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்வையிடலாம். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. நிகழ்வு அரங்கின் இருக்கைகள் நிரம்பும் வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி” என்று தெரிவித்தார்

மேலும், சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு AI தொழில்நுட்ப படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக 50 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு ஜேஇஇ நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே! - VOCATIONAL TRAINING ADMISSION

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.