ETV Bharat / state

ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா?… ராகுல் காந்தி தண்டனை குறித்து சீமான் கேள்வி

author img

By

Published : Mar 23, 2023, 6:11 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆட்சியாளர்களை விமர்சிப்பது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் பிரதமரை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு தண்டனை அறிவித்திருப்பது ஏன் என திருச்சியில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா?… ராகுல் காந்திக்கு தண்டனை குறித்து சீமான் கேள்வி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல் துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

அந்தச் சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரிலான வழக்கில் சீமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் காவல் துறை தரப்பில் திருச்சி விமான நிலையத்தில் கலகம் செய்யும் நோக்கத்தோடு கூடியது, ஆயுதங்களை வைத்திருந்தது, உள்ளிட்ட வழக்குகள் நாம் தமிழர் கட்சியினர் மீதும் மதிமுகவினர் மீதும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்டோரும் மதிமுகவினரும் இன்று ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ''ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகள் காலம் சிறைத் தண்டனை அனுபவித்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை என்கிற பெயரில் சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்கிற கொடுஞ்சிறைக்கு மாற்றியுள்ளார்கள். இது எந்த விதத்தில் விடுதலை ஆகும்.

அவர்கள் நான்கு பேரையும் உடனடியாக சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி தரவில்லை.
தமிழ்நாட்டில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் எனப் பேசுகிறார்கள். ஆனால், அது நடைமுறையில் இல்லை.

திமுக தேர்தல் வாக்குறுதியில் தகுதியுள்ள பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என எங்கும் கூறவில்லை. ஆனால், தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என்கிறார்கள். எதை வைத்து உரிமைத்தொகை வழங்கத் தகுதியை தீர்மானிப்பார்கள்.

பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடிய போது அது சூது எனக் கூறி அந்த விளையாட்டை விளையாடுபவர்களை கைது செய்தார்கள். தற்போது அதை ஆன்லைனில் ரம்மி என்கிற பெயரில் அறிவுத் திறன் மேம்பாடு எனக் கூறுகிறார்கள். ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாங்கள் தேர்தல்களில் தனித்து தான் போட்டியிடுவோம். இதுவரை நடந்த தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை. மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார்கள்.

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இது போல் ஒரு அணியை உருவாக்கினார்கள். ஆனால், தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்ததால், அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது.

ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா? அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை வழங்கியுள்ளது. அதை படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. மாற்று அணி வந்தாலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். அது போல் ஒரு சூழல் வந்தால், அந்த நேரத்தில் கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து சிந்திப்போம்.

பாஜக அரசு அவர்கள் நினைப்பதை செயல்படுத்துகிறார்கள். இது சர்வாதிகாரம் கூட கிடையாது, கொடுங்கோன்மை ஆட்சி. தமிழ்நாட்டில் அதிமுகவின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. நான் என் கட்சியின் எதிர்காலம் குறித்து தான் சிந்திப்பேன்” எனப் பேசினார்

இதையும் படிங்க: ஆதி திராவிடர் மாணவர்களுக்கு 4 இடங்களில் நவீன வசதிகளுடன் விடுதிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.