ETV Bharat / state

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு 4 இடங்களில் நவீன வசதிகளுடன் விடுதிகள்

author img

By

Published : Mar 20, 2023, 4:18 PM IST

ஆதி திராவிடர் மாணவர்களுக்காக மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ.100 கோடி மதிப்பில், 4 விடுதிகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு விடுதிகள்
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு விடுதிகள்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் என்ற தலைப்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக உரையாற்றிய அவர், "சமூக நீதியையும், சமத்துவம் நோக்கிய வளர்ச்சியையும் அடிப்படை கொள்கைகளாக கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் நவீன வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பில் 4 புதிய விடுதிகள் கட்டித்தரப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

"தனிச்சட்டம் இயற்றப்படும்": ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டத்தை செயல்படுத்துவதை உறுதி செய்ய, தனிச்சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதையேற்று, இத்துணைத் திட்டத்தின் செயல்பாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்பு சட்டத்தை அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்.

கழிவுகளை அகற்ற புதிய திட்டம்: பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. இதனால், ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க ஒரு புதிய திட்டத்தை அண்மையில் அரசு தொடங்கியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி நவீன இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, இத்திட்டம் தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டவும் வழிவகுக்கும். முதற்கட்டமாக இப்பணிபுரியும்போது இறக்க நேரிட்ட இப்பணியார்களின் குடும்பங்களுக்கும், இப்பணியில் தற்போது ஈடுபட்டுள்ள நபர்களுக்கும், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து பெருநகர சென்னை பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தேவையான திறன் பயிற்சியுடன் இயந்திரங்களையும், பாதுகாப்புக் கருவிகளையும் கொள்முதல் செய்திடவும் சிறப்பு மானியம் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சியின் அடிப்படையில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரும் நிதியாண்டிலிருந்து 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வண்ணார்கள் நல வாரியத்துக்கு ரூ.10 கோடி: புதிரை வண்ணார்கள் நல வாரியத்துக்கு புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், நலப்பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி வழங்கப்படும்.

குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்: நகர்ப்புற பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த 'அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.1000 கோடி செலவில் வரும் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது'' என்று கூறினார்.

இதையும் படிங்க: TN budget 2023: அரசு வழங்கும் மானியங்களுக்காக மின்சாரத்துறைக்கு ரூ.14,063 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.