ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே சாதிச்சான்றிதழ் கேட்டு பழங்குடியினர் 14 மணி நேரம் போராட்டம்!

author img

By

Published : Jun 21, 2023, 11:25 AM IST

student strike
student strike

ஈரோடு, சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மலையாளி இன மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்குமாறு 14 மணி நேரத்துக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதி சான்றிதழ் கேட்டு பழங்குடியினர் 14 மணி நேரம் போராட்டம்!

ஈரோடு: தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் மலையாள இன பழங்குடியினருக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கப்படுவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுகின்றனர். ஆனால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர், அந்தியூர் மலைப்பகுதியில் வாழும் மலையாளி இன மக்களுக்கு இதர வகுப்பினர் என வருவாய்த்துறை சான்றிதழ் வழங்குகின்றனர்.

சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் மலையாளி மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்குவதைப் போல, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கக்கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அரசு கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆரம்பக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோருடன் ஒரு வாரமாக பள்ளி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சான்றிதழ் கிடைக்கும் வரை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை எனப் பெற்றோர் கூறியதால் கரளையம், பசுவனாபுரம், எக்கத்தூர், பவளக்குட்டை, கடம்பூர், கல் கடம்பூர், அத்தியூர், மல்லியம்துர்க்கம், குரும்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியைப் புறக்கணித்து திங்கள்கிழமை கடம்பூரில் அரசின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், பல கி.மீ. தூரம் நடந்து சென்றன. மேலும் பழங்குடியினர் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் கும்பி ஆட்டமும் அனைவரையும் கவர்ந்தது.

இதையும் படிங்க: மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு: திருவாரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

கடம்பூர் முக்கிய சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மழை தொடர்ந்து பெய்த போதிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து போராட்ட களத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்தா, ஈரோடு மாவட்ட சார் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நள்ளிரவில் மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம் மாவட்டத்தில் தங்களது உறவினர்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கப்படுவதைப் போல ஈரோடு மாவட்டத்திலும் எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பேசி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த சான்றிதழின் கோரிக்கை ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் மேலும் நடவடிக்கை எடுப்பதாகவும் சார் ஆட்சியர் உறுதி அளித்தார்.

இதையடுத்து 14 மணி நேரத்துக்கும் மேல் நடத்தப்பட்ட போராட்டத்தை கைவிட்டனர். மேலும் கடம்பூர்,அந்தியூர் பகுதியில் மலையாளி இன மாணவர்கள் பள்ளியில் சேர்க்க, மாவட்ட கல்வி அலுவலரிடம் சார் ஆட்சியர் உரிய அறிவுரை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய மலையாளி இன சங்கத் தலைவர் மகேஷ் கூறுகையில், ’’சேலத்தில் வசிக்கும் தந்தைக்கு எஸ்.டி. சான்றிதழும், அவரது மகன் கடம்பூரில் வசிக்கும்போது, ஓசி சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த குழப்பத்துக்கு யார் காரணம். இந்த சான்றிதழ் வழங்குவதில் வருவாய்த்துறைக்கு என்ன தயக்கம்’’ என்றார்.

இதையும் படிங்க: நிதி நிறுவன மோசடி செய்த 1500 பேர்களின் சொத்துகள் முடக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.