ETV Bharat / state

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு: திருவாரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

author img

By

Published : Jun 20, 2023, 9:34 PM IST

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் கேடாக முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்

திருவாரூர்: மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது நமது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்.

பாஜக கடந்த பத்தாண்டுக் காலமாகப் பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை, பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை நிதிஷ்குமார் தொடங்கி வைக்க இருக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன். உங்களுடைய அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன். ஜனநாயகப் போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் மூவாயிரம் - நான்காயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். கலைஞரின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே. இங்கே அமர்ந்திருக்கிறீர்களே நீங்கள் தான் கலைஞருடைய உடன்பிறப்புகள். இதனை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் இதைச் செய்ய முடியாது.

இதையும் படிங்க: Kalaignar Kottam: திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - இந்திய நாட்டுக்கும் - இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது கேடாக முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ - செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும், வெற்றி வேண்டும்.

வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத் தான், பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள கூட்டம் அமையவிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன், கலைஞரின் உடன்பிறப்புகளே! நாம் ஒருதாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவோம். கலைஞர் அவர்களுக்கு நான் மட்டும், மகனல்ல.

நீங்கள் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள் தான். கொள்கைவாதிகள் தான், கொள்கை வாரிசுகள் தான். அடக்குமுறை ஆதிக்கங்களுக்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளான நாம், இந்தியா முழுமைக்குமான அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.