ETV Bharat / bharat

எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

author img

By

Published : Jun 20, 2023, 7:10 PM IST

பாட்னாவில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

MK Stalin
MK Stalin

திருவாரூர் : பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வரலாற்றை அறிந்துக் கொள்ளும் வகையில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரம் சதுரடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.

இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க கலைஞரின் தளபதியாக எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.

முன்னதாக கலைஞர் தோட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

முன்னதாக, கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்பட்டது. நிதிஷ் குமார் தன்னை தொலைபேசி மூலம் அழைத்து கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாக தெரிவித்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டு உள்ளார்.

அதற்காக டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க் கட்சிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி ஆம் ஆத்மி மற்றும் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்க போவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வெப்ப அலை நிலவும் மாநிலங்களுக்கு உதவி... மன்சுக் மாண்டவியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.