ETV Bharat / bharat

"மூத்த தலைவரிடமிருந்து வந்த அழைப்பு.. இழிவுபடுத்த நிர்வாகிகளுக்கு அழுத்தம்" - ஸ்வாதி மாலிவாலின் புதிய குற்றச்சாட்டு என்ன? - Swati Maliwal allegations

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 6:57 PM IST

Swati Maliwal allegation on AAP members: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால், தனக்கு எதிராக செயல்படும் படி கட்சி நிர்வாகிகளுக்கு அழுத்தம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, தன்னை தாக்கியதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் மீது புகார் அளித்திருந்தார்.

ஸ்வாதி மாலிவால் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோப்புப்படம்
ஸ்வாதி மாலிவால் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோப்புப்படம் (Credits - ANI Photos)

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவரது முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில், பிபவ் குமார் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னை இழிவுபடுத்த பலர் தயாராக இருப்பதாக ஸ்வாதி மாலிவால் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் என்னை இழிவுபடுத்த கட்சி நிர்வாகிகள் மீது செலுத்தப்படும் அழுத்தம் குறித்து தெரிவித்தார்.

என்னை குறித்த அவதூறான கருத்துகளை பேசும் படியும், என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடவும் அழுத்தம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், எனக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அசாதுதீன் ஓவைசி கையில் அம்பேத்கர் படத்திற்கு பதில் ராமர் படம்.. உண்மை நிலவரம் என்ன?

என்னை இழிவுபடுத்தும் பணிக்காக ஒருவருக்கு கணினி வேலையும், மற்றொருவருக்கு ட்வீட் போடும் பணியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவருக்கு அமெரிக்காவில் இருக்கும் தன்னார்வலர்களை அழைத்து எனக்கு எதிரான கருத்துகளை பதிவிடும் வேலையும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவருக்கு நெருக்கமான சில பத்திரிகை நிருபர்களுக்கு என்னை குறித்தான பொய்யான தகவல்களை வெளியிடும் பணியும் வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அந்த பதிவில், "நீங்கள் எனக்கு எதிராக ஆயிரம் பேரை திரட்டலாம், அதை அனைத்தையும் நான் தனியாகவே சந்திப்பேன். காரணம், உண்மை என் பக்கம்தான் உள்ளது. எனக்கு கட்சி நிர்வாகிகள் மீது கோபம் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பெரிய தலைவர்கள் கூட அச்சப்படுகிறார்கள்.

இருப்பினும், டெல்லியில் பெண் அமைச்சர் கூட, கட்சியின் மூத்த சக உறுப்பினர் என்று கூட பார்க்காமல் என்னை குறித்து இழிவாகப் பேசுவது தான் வருத்தமளிக்கிறது. நான் எனது சுயமரியாதைக்காக போராட துவங்கியுள்ளேன். இதில் எனக்கு நீதி கிடைக்கும் வரை நான் தனியாக போராடுவேன். ஆனால், ஒரு போதும் கைவிடமாட்டேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: புதை குழியில் தள்ளும் சைபர் க்ரைம் மோசடிகள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.