ETV Bharat / state

சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவர் மீது பாயந்த குண்டாஸ்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 5:39 PM IST

Goondas Act
திருப்பத்தூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

Goondas Act: திருப்பத்தூர் அருகே சட்ட விரோதமாக கருக்கலைப்பு பணியைச் செய்து வந்த போலி மருத்துவர் உட்பட 2 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, சாமநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கேன் சென்டர் வைத்து உள்ளார். திருப்பத்துார் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்தும், சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யும் பணியையும் செய்து வந்துள்ளார்.

மேலும், இவர் மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 முறைக்கும் மேல் கைது செய்து சிறைக்கு சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் கருக்கலைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி மருத்துவமனைத் தொடங்கி அங்கும் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகவல் போலீசார் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், ஆட்சியரின் உத்தரவின்பேரில், சுகுமார் நடத்தி வந்த போலி மருத்துவமனையைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க போலீசார் மற்றும் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

அதேநேரத்தில் திருப்பத்துார் அடுத்த பேரணாம்பட்டு அருகே சிம்மனபுதுார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 5க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளதாக குழுவிற்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவக் குழுவும், போலீசாரும் அங்கு விரைந்துச் சென்று அங்கிருந்த கர்ப்பிணி பெண்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், புரோக்கர்கள் மூலம் சுகுமாரிடம் கருக்கலைப்பு செய்ய வந்தது தெரிய வந்தது. மேலும், அதிகாரிகளைக் கண்டதும் சுகுமார் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

பின்னர், கர்ப்பிணி பெண்களிடம் இது போன்ற போலி டாக்டர்களிடம் சிகிச்சைப் பெற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும், கருக்கலைப்பு என்பது சட்டபடி குற்றம் எனவும், உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அரசு மருத்துவமனைகளைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுரை கூறி கர்ப்பிணிகளை அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சுகுமாரைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் வேலூரில் தலைமறைவாக இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக வேலூர் விரைந்த தனிப்படை போலீசார் அங்கு சுகுமார் மற்றும் அவருடன் இருந்த சங்கர், வேடியப்பன், சிவா, விஜய், உள்ளிட்ட 5 பேரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பெயரில், கருக்கலைப்பு கும்பலான சுகுமார், சங்கர், சிவா உள்ளிட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதையும் படிங்க: சீரியல் நடிகையை கரம் பிடித்தார் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.