ETV Bharat / state

"அண்ணாமலை இந்து மத நம்பிக்கையை இஸ்லாம் மீது திணிக்கிறார்" - தவ்ஹீத் ஜமாத் தலைவர் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 16, 2023, 7:00 PM IST

TamilNadu
பாஜக

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத நம்பிக்கையை இஸ்லாம் மதத்தின் மீது திணிக்கிறார் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சுலைமான் குற்றம் சாட்டியுள்ளார். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"அண்ணாமலை இந்து மத நம்பிக்கையை இஸ்லாம் மீது திணிக்கிறார்" - தவ்ஹீத் ஜமாத் தலைவர் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் இன்று(ஜூலை 16) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சுலைமான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 'தவ்ஹீதும் தர்பியத்தும்' என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் செய்யது அலி உரையாற்றினார்.

இக்கூட்டத்தில், 'தவ்ஹீதும் தர்பியத்தும்' எனும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - இந்தியாவின் இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அமைந்துள்ள பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சுலைமான், "பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் வாழ்கின்ற இறையாண்மையை நேசிக்கின்ற யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அவரவர் அவர்களுடைய மத நம்பிக்கையை பின்பற்றிக் கொள்ள அரசியல் அமைப்புச் சட்டம் இடம் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தை பறித்து விட்டு அனைவருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என மோடி அரசு திட்டமிட்டு அதற்கான காரியங்களில் இறங்கியுள்ளது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பொதுவாக தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், நீண்ட காலமாக சிறைத் தண்டனை பெற்று வருபவர்களை நல்ல எண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். அந்த வகையில் ஏராளமான முஸ்லீம்கள் தற்போது சிறையில் வாடி வருகிறார்கள். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அந்த அறிவிப்பை அவர் விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

இஸ்லாமியர்கள் காலத்துக்கு ஏற்றார்போல் தங்களது சட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் கூறியிருக்கிறார். அவர் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மதம் என்ன சொல்கிறதோ, அதே சட்டத்தை மற்றொரு மதம் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது அறிவாளித்தனம் கிடையாது.

அவ்வாறு ஒரு மதத்தில் இருக்கும் சட்டங்கள் மற்ற மதங்களிலும் இருந்தால், அப்போது மதங்களே தேவை இருக்காது. எல்லா மதங்களுக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றன, அதுதான் யதார்த்தம். அதைப் புரியாமல் அண்ணாமலை பேசுகிறார். அவர், இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இஸ்லாம் மதத்தின் மீது திணிக்கிறார். இது ஒரு அறிவார்ந்த பேச்சு கிடையாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: பொது சிவில் சட்டம்: இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.