ETV Bharat / state

புதியம்புத்தூரில் விரைவில் அனைத்து ஆடை விற்பனை வளாகம்.. தூத்துக்குடி ஆட்சியர் நம்பிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 1:34 PM IST

Collector consultation with readymade garment manufacturers
ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

Puthiamputhur Mini Textile Park: புதியம்புத்தூரில் மினி ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி: தமிழகத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதியம்புத்தூர் விளங்குகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட இந்த ஊரில், திரும்பிய பக்கமெல்லாம் ஆயத்த ஆடை உற்பத்தி நடந்து வருகிறது. இதன் காரணமாக இவ்வூரை “குட்டி திருப்பூர்” என்று அழைக்கின்றனர்.

இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வித விதமான ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

மூலப்பொருள்களின் விலை ஏற்றம், பெரு வணிக நிறுவனங்களின் போட்டி என பல்வேறு சவால்கள் இருப்பினும், தரத்தில் எவ்விதமான சமரசமும் செய்யாமல் மக்கள் விரும்பும் வகையில் ஆடைகளைத் தயாரித்து வருகின்றனர். இருப்பினும் திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ளது போல, உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பயன் பெறும் வகையில் புதியம்புத்தூரில் மினி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை: இந்நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில், நேற்று (நவ.29) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது வியாபாரிகள் சிலர் பேசுகையில், “புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் ஆங்காங்கே அமைந்துள்ளன. இந்த நிறுவனங்களின் மூலம் பல விதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வியாபாரிகள் ஆடைகளைப் பார்த்து வாங்குவதில் சிரமம் அடைகின்றனர். எனவே ஒரே இடத்தில் 50 முதல் 60 கடைகள் கொண்ட விற்பனை வளாகம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான இடத்தை மட்டும் மாவட்ட நிர்வாகம் கொடுத்தால் போதும், கட்டிடங்களை நாங்களே கட்டிக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த ஆட்சியர், “புதியம்புத்தூரில் அனைத்து ஆடை விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக, இங்கே வரும் வியாபாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தால் நன்றாக இருக்கும். எனவே வியாபாரிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு கூட்டத்தை விரைவில் நடத்தி, அவர்களது கருத்துக்களையும் அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் அதிகாரிகள் கலந்த கொண்டனர்.

இதையும் படிங்க: தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் 2023; 20.64 சதவீத வாக்குகள் பதிவு.. வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.