ETV Bharat / state

ஆக்கிரமிக்கப்பட்ட பாசன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

author img

By

Published : Jun 29, 2021, 2:05 PM IST

ஆக்கிரமிக்கப்பட்ட பாசன வாய்க்கால்
ஆக்கிரமிக்கப்பட்ட பாசன வாய்க்கால்

திருவாரூரில் 30 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாசன வாய்க்காலை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருவாரூர்: நன்னிலம் அருகேவுள்ள கொல்லாபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனைத் தூர்வாராததால் அதனைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற முடியாமல் 30 ஆண்டுகளாகத் தவித்துவருவதாக உழவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய உழவர்கள், “நன்னிலம் அருகேவுள்ள கொல்லாபுரத்தில் இந்தப் பாசன வாய்க்கால் துணையோடு முப்போகம் சாகுபடி நடைபெற்றுவந்தது.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாசன வாய்க்கால் தூர்வாரப்படாததால், வாய்க்காலின் அருகில் குடியிருப்பவர்கள் பாசன வாய்க்காலை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சுற்றுச்சுவர் அமைத்தும், பாலங்கள் கட்டியும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துவைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

இதனால், இந்தப் பாசன வாய்க்காலையே நம்பியுள்ள கொல்லாபுரம், கந்தன்குடி, தென்னலக்குடி, குருங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற முடியாமல் தவித்துவருகிறோம்.

இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் பொதுப்பணித் துறை அலுவலர்களிடமும் மனு அளித்தும் அவர்கள் அலட்சியம் காட்டிவருவதால் தற்போது பாசன வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி தண்ணீர் செல்லும் வழிகள் மறைந்துவிட்டன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாசன வாய்க்கால்

இந்நிலையில், உழவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில்கொண்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக பாசன வாய்க்காலைத் தூர்வாரி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: காணாமல் போன பாசன வாய்க்கால்: விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.