ETV Bharat / state

ஆடு மேய்ப்பவர் சந்தேக மரணம் - ஒரு வேளை உணவுக்கு தள்ளாடும் குடும்பம்!

author img

By

Published : Feb 22, 2020, 9:55 AM IST

ஆட்சியரிடம் மனு அளித்த குடும்பத்தினர்
ஆட்சியரிடம் மனு அளித்த குடும்பத்தினர்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஆடு மேய்ப்பவர் சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளதால், அடுத்த வேளை உணவுக்காக அவரது குடும்பம் தள்ளாடிவருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். இவர், பிப்.12 ஆம் தேதி பக்கத்து ஊரான குலமந்தை கிராமத்தில் ஆடு மேய்ப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது ஆடுகள் வழித்தவறி வரதன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் நிலத்திற்குள் சென்று பயிர்களை மேய்ந்துள்ளது.

இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தனது நிலத்தில் ஆடு மேய்ந்ததற்காக, அபராதத் தொகையாக 20ஆயிரம் ரூபாயை ஆசிரியர் கேட்டுள்ளார். ஆனால், ஆயிரம் ரூபாய் மட்டுமே கோபாலகிருஷ்ணன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட வரதன், தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படியும் கூறியதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிவாரணம் கோரிய கோபாலகிருஷ்ணனின் மனைவி, குழந்தைகள்.

இச்சம்பவத்திற்குப் பிறகு கோபாலகிருஷ்ணன் மாயமானார். பல இடங்களில் அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பிப்.16ஆம் தேதி காலை பரதன் நிலத்திற்கு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். தூக்கிட்டு இறந்த அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை.

அவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். தற்போது அவரது குடும்பம் அடுத்த வேலைக்கு உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, கோபாலகிருஷ்ணன் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, தகுந்த நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு, அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷன், கோகுல மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ராஜாராம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: மது குடிக்க பணம் தரமறுத்த சகோதரியை கொல்ல முயன்ற சகோதரர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.