ETV Bharat / state

திருவண்ணாமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

author img

By

Published : Jul 6, 2021, 3:25 AM IST

Updated : Jul 6, 2021, 7:05 AM IST

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

ஜூலை மாத இறுதிக்குள் 100 விழுக்காடு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் நகராட்சியாக, திருவண்ணாமலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், இன்று (ஜூலை 05) மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், ஆட்சியர் பா. முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.கே. விஷ்ணு பிரசாத் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதன்மை மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

30ஆவது மாவட்டம்

ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா . சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, "முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் 30ஆவது மாவட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

பழைய அரசு மருத்துவமனை, ஆயுஷ் மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவைகளில் புதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள், கரோனா குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டு, புதிய கரோனா பின் விளைவு புறநோயாளிகள் பிரிவு, தாய்ப்பால் சேமிப்பு வங்கி உள்ளிட்ட பிரிவுகள் திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டன.

மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான 30 படுக்கைகள், அவசரப் பிரிவு மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் வசதி, பழைய அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஷ் மருத்துவமனையில் இரண்டு இடங்களில் ' D ' வகை ஆக்சிஜன் சிலிண்டர் இணைப்புடன் 380 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 127 ஆக குறைந்துள்ளது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

குறைந்து வரும் கரோனா பாதிப்புகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகம், மருத்துவத் துறை , உள்ளாட்சித் துறைகள் உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் 9 மடங்கு தொற்று பாதிப்பு குறைக்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் , மாவட்டத்தில் தினமும் 4,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகப்படியாக தினமும் 1.70 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . தமிழ்நாட்டுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள 1.57 கோடி தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் மூலம் நடப்பு ஜீலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

கேரளா மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு 10.4 விழுக்காடாகவும், வடகிழக்கு மாநிலங்களில் 15 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் மிகக் குறைவாக 2.5 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.

திருவண்ணாமலை ஆன்மீக நகரம் , தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தரும் நகரம்.

முதல் நகராட்சி

திருவாரூர் மாவட்டம் , காட்டூர் ஊராட்சி முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழ்கிறது . மேலும் , நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

அதுபோல , திருவண்ணாமலை நகராட்சியில் ஜூலை மாத இறுதிக்குள் 100 விழுக்காடு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் நகராட்சியாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம் .

முதலமைச்சரின் முயற்சியால் , தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 90 விழுக்காடு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 75 இடங்களில் சித்தா, யோகா, யுனானி சிகிச்சை பிரிவுகள் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா 3 ஆவது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இருதய மருத்துவ நிபுணர் நியமிக்க வலியுறுத்தி உள்ளார்கள் , விரைவில் மருத்துவர் மற்றும் முழு கட்டமைப்பு வசதியுடன் , இருதய மருத்துவப் பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஏழு தமிழர்கள் விடுதலை: அனைவரும் ஏற்கும் முடிவை முதலமைச்சர் எடுப்பார் - அமைச்சர் ரகுபதி.

Last Updated :Jul 6, 2021, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.