ETV Bharat / state

பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர் வரத்து அதிகரிப்பு - பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

author img

By

Published : Sep 22, 2020, 2:23 PM IST

Tiruvallur collector warning to public
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வரும் கால்வாயில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, செல்ஃபி புகைப்படம் எடுக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறியதாவது: 'ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு தற்போது விநாடிக்கு 732 அடி கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் யாரும் பூண்டி - கண்டலேறு நீர்வரத்து கால்வாய்களில் குளிக்கவோ, பார்வையிடவோ, விளையாடவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்ல வேண்டாம்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


தமிழ்நாடு - ஆந்திர மாநில அரசும் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டதன் பேரில், சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டிலுள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு ஆண்டுக்கு 8 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆண்டுதோறும் ஆந்திர மாநிலத்தில் பருவமழைக்கு ஏற்ப 5 முதல் 8 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்படுகிறது. தற்போது பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைவாக உள்ளது என்று தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசை கேட்டுக்கொண்டதன் பேரில், கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக 150 கிலோமீட்டர் பயணித்து தமிழ்நாடு எல்லையான ஜீரோ பாயின்ட் வரை வந்தடைந்தது. அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்த்தூவி தண்ணீரை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் பயணித்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு விநாடிக்கு 732 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து தற்போது கண்டலேறு அணையில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டுவதுடன், இங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் தண்ணீர் அனுப்பப்படவுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்னை குடிநீர் பூர்த்தி செய்யப்படும்’ என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.