ETV Bharat / state

ஆட்சியரிடம் சீறிய சபாநாயகர், எம்.பி., - பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு

author img

By

Published : Jul 12, 2022, 9:14 PM IST

Updated : Jul 13, 2022, 9:16 AM IST

மூடப்பட்ட கல்குவாரிகளின் நிலை குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, நெல்லை மாவட்ட ஆட்சியரை பதிலளிக்கும்படி சபாநாயகர் மற்றும் எம்பி ஆகியோர் கோபமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது கோபமடைந்த சபாநாயகர், எம்பி - பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு!
நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது கோபமடைந்த சபாநாயகர், எம்பி - பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில், கூடங்குளம் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி.கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.கணேசனிடம், நெல்லையில் கல்குவாரிகள் மூடப்பட்டிருப்பதால் பல ஆயிரம் பேர் வேலை இழந்து தவிப்பதாகவும், கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆட்சியரிடம் சீறிய சபாநாயகர், எம்.பி., - பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு

இதற்கு, ‘முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் பதிலளித்தார். இந்நிலையில் அருகில் இருந்த சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை பதில் சொல்லும் படி கோபத்துடன் கட்டளையிட்டார். அதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ‘இது பற்றி வேறு ஒரு நிகழ்வில் பேசுவோம். தற்போது வேண்டாம்’ எனக் கூறினார்.

ஆனால் மீண்டும் சபாநாயகர் குறுக்கிட்டு பதில் சொல்லும்படி கூறினார். தொடர்ந்து ‘இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்று கூறினார். இருப்பினும், எத்தனை நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர், ஆட்சியரைப் பார்த்து கோபத்துடன் கேட்டார்.

இதற்கிடையே அருகில் இருந்த நெல்லை திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், ‘கல்குவாரிகளை மூடி 60 நாட்கள் ஆகிவிட்டது. 50,000 பேர் வேலை இழந்து விட்டனர். எனவே பதில் கூறச் சொல்லுங்கள்’ என்று கோபத்துடன் ஆட்சியர் விஷ்ணுவை மிரட்டும் தொனியில் பேசினார்.

இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. உடனே அமைச்சர் சி.வி.கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தை பார்த்து, “இருங்க.. இது என்ன வீடா..?’ எனக் கேட்டார். பின்னர், இந்த விஷயத்தில் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்த பின்பு பத்திரிகையாளர் சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக நெல்லை மாவட்டத்தில் கடந்த மே 15 ஆம் தேதி அடைமிதிப்பான் குளம் குவாரியில் ஏற்பட்ட விபத்தில், நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் மொத்தமுள்ள 55 குவாரிகளில் 13 குவாரிகள் விதிகளை மீறியதாகவும், அக்குவாரிகளை ஏன் மூடக்கூடாது என விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் 41 குவாரிகள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அளவு கனிம வளம் எடுத்த காரணத்திற்காக, சுமார் 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 13 குவாரிகளில், திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் குவாரியும் ஒன்று எனவும், விபத்து நடைபெற்ற குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் சபாநாயகருக்கு நெருக்கமானவர் என்றும் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

எனவே இது போன்ற விவகாரத்தால் நெல்லையைச் சேர்ந்த திமுக எம்பி, சபாநாயகர் உள்பட பல முக்கிய நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் மீது சில தினங்களாகவே கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர் மற்றும் எம்பி ஆகிய இருவரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன் பத்திரிகையாளர்கள், அலுவலர்கள் முன்னிலையில் ஆட்சியரை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து வழக்கில் குவாரி உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

Last Updated :Jul 13, 2022, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.