ETV Bharat / state

நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை: அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு: மீட்பு பணிக்காக ஊட்டியில் இருந்து 50 ராணுவ வீரர்கள் நெல்லைக்கு வருகை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 9:35 PM IST

நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை: அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு
நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை: அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகள் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இதுவரை மழை வெள்ளத்திற்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிக்காக ஊட்டியில் இருந்து 50 ராணுவ வீரர்கள் நெல்லைக்கு இன்று(டிச.18) இரவு வந்து சேர்வார்கள் என தெரிவித்தார்.

நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை: அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு: மீட்பு பணிக்காக ஊட்டியில் இருந்து 50 ராணுவ வீரர்கள் நெல்லைக்கு வருகை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக பல்வேறு மீட்புக்குழுக்கள் மற்றும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வெள்ள பாதிப்பின் நிலை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்படக் கூடுதல் அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டார். இதையடுத்து நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் வெள்ள பாதிப்புகள் குறித்துப் பார்வையிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று (டிச.18) நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் செய்தியாளர்களுக்குக் கூட்டாக அளித்த பெட்டியில் கூறியதாவது, "நெல்லையில் மிகக் கனமழை பெய்த காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொறுப்பு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்திலிருந்து மக்களுக்குத் தேவையான நிவாரண பணிகளைச் செய்து வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3ஆயிரத்து 500 பேர் நேற்று(டிச.18) காலை முதல் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளோம். சில இடங்களில் மழை அதிகமாகப் பெய்தது. சிலர் வீடுகளிலே இருப்பதாகத் தெரிவித்தனர். அவர்களுக்குச் சாப்பாடு கொடுப்பதற்குப் படகு வசதி ஏற்பாடு செய்துள்ளோம். என்னையும் சக அமைச்சர்களையும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். நாங்கள் மீட்புப் பணியில் தயார் நிலையில் இருக்கிறோம்.

நேற்றை விட இன்று(டிச.18) மழை குறைந்துள்ளது. தண்ணீரும் வடியத் தொடங்கியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை சந்திப்பு சிந்துப்பூந்துறை பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அளவுக்கு அதிகமாகப் படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லையைப் பொறுத்த வரையில் 36 கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்கள் உடைந்திருப்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முடிந்தவரை வெளியே வரவேண்டும்.

நெல்லையில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. அடுத்த கட்டமாக கான்கிரீட் போடும் பணிகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. கால்வாயில் தற்போது பிரச்சனை இல்லை. முதலமைச்சர் நாளை(டிச.18) டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் நிவாரணம் கேட்க உள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த மாவட்டத்திற்குத் தேவையான நிவாரணத்தையும் முதலமைச்சர் அறிவிப்பார். பொதுமக்களுக்குப் பால் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். பத்தாயிரம் லிட்டர் பால் கூடுதலாகக் கொண்டுவரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் ரயில் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலில் இருக்கும் பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேள்விக்குப் பதிலளித்த வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், "திருச்செந்தூரிலிருந்து சென்னை சென்ற ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயிலில் இருக்கும் பயணிகளுக்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு மீட்புப் பணிக்காக சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.

பயணிகளில் சிலர் அருகில் உள்ள பள்ளிகளில் தங்கிவைக்கப்பட்டு உள்ளனர். சிலர் ரயில் நிலையங்களிலேயே தங்கி உள்ளனர். பயணிகள் தங்கவைக்கப்பட்ட பள்ளியில் 500 பேருக்கான உணவை தாசில்தார் ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு 84 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்குச் செல்கின்றனர். இதனைத் தவிர்த்து, ஊட்டியிலிருந்து 50 ராணுவ வீரர்கள் நெல்லைக்கு மீட்டுப் பணிக்கு இன்று(டிச.18) இரவு வந்து சேர்வார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் கனமழையால் மின் விநியோகம் பாதிப்பு..! சீரமைக்க சிறப்புக்குழு அமைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.