ETV Bharat / state

நெல்லையில் 1113 பதவிகளுக்கு நாளை முதல் கட்டத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

author img

By

Published : Oct 5, 2021, 6:20 PM IST

நெல்லையில் 1113 பதவிகளுக்கு நாளை முதல் கட்டத்தேர்தல்
நெல்லையில் 1113 பதவிகளுக்கு நாளை முதல் கட்டத்தேர்தல்

நெல்லையில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 1113 பதவிகளுக்கு நாளை முதல் கட்டத் தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை முதல் கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை முதல் கட்டத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 2069 பதவிகளுக்கு இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது.

முதல்கட்டத் தேர்தல்:

நாளை நடைபெறும் முதல் கட்டத்தேர்தலைப் பொறுத்தவரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 32 பேர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 319 பேர், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 534 பேர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 21,201 பேர் என மொத்தம் 3066 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

முதல்கட்டத் தேர்தலையொட்டி ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டப் பகுதிகளில் மொத்தம் 621 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லையில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 1113 பதவிகளுக்கு நாளை முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகின்றது.

கூடுதல் பாதுகாப்பு

இவற்றில் 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால், அங்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 64 வாக்குச்சாவடிகளை வெப்கேமரா கொண்டு அலுவலர்கள் கண்காணிக்க உள்ளனர்.

முதல் கட்டத்தேர்தலில் 5,305 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்காளர்களைப் பொறுத்தவரை ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 765 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 78,234 பேர், மூன்றாம் பாலினத்தவர் 43 பேர் என மொத்தம் 3 லட்சத்து 48ஆயிரத்து 42 வாக்காளர்கள் நாளை நடைபெறும் முதல் கட்டத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

வாக்குப்பதிவில் முறைகேடுகள் மற்றும் பதற்றத்தைத் தணிக்க மாவட்டம் முழுவதும் 10 பறக்கும் படைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இதையொட்டி ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குச்சீட்டுப் பெட்டிகள் அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

4 பதவிகளுக்கு வாக்களிக்க 4 விதமான வாக்குச்சீட்டுகள்

அதாவது உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, ஒரே நபர் நான்கு பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதால், பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வெள்ளைநிற வாக்குச்சீட்டு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டு, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டு என நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது.

வாக்குப்பெட்டி அனுப்பும் பணிகள் தீவிரம்

இந்த வாக்குச்சீட்டுகள் உள்பட 72 பொருட்கள் அடங்கிய வாக்குச்சீட்டுப்பெட்டிகள் ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் வாக்குப்பெட்டி அனுப்பும் பணிகள் நடைபெற்றது.

இந்த வாக்குப்பெட்டிகளை சம்பந்தப்பட்ட மையங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.