ETV Bharat / state

சபரிமலை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த டிரம்ஸ் சிவமணியின் இசைக் கச்சேரி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 4:30 PM IST

drums sivamani music concert at sabarimala
சபரிமலையில் டிரம்ஸ் சிவமணியின் இசைக் கச்சேரி

Drums Sivamani Music Concert at Sabarimala: கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்காக வந்த பிரபல இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி ஐயப்பன் பாடல்களை டிரம்ஸ் மூலம் இசைத்து பக்தர்களை வெய்சிலிர்க்க வைத்தார்.

சபரிமலையில் டிரம்ஸ் சிவமணியின் இசைக் கச்சேரி

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, கார்த்திகை மாதம் முதல் விரதம் இருந்து இருமுடிகட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 17ஆம் தேதி முதல் மண்டல காலம் தொடங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கடந்த 2 ஆண்டுகள் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகளவு பக்தர்களால் சபரிமலை விழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது. மண்டல பூஜைக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் மட்டுமின்றி, வார நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவு வருகை தருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வரும் சூழலில், பிரபல பின்னணி இசையமைப்பாளரான டிரம்ஸ் சிவமணியும் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசித்து வருகிறார்.

இவர், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்று (டிச.02) தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்த நிலையில், சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கே இருந்த சாஸ்தா கலையரங்கத்தில் ஐயப்பன் பாடல்களை டிரம்ஸ் மூலம் இசைத்து பக்தர்களை வெய்சிலிர்க்க வைத்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் அருகே இந்த சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் கேரளாவின் பாரம்பரிய கலைகளான களரி, கதகளி, இசை, நடனம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒருபகுதியாக இன்று டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரள பிரபல பாடகர் சுதீப்குமார் ஐயப்பனுக்கான துதிப்பாடல்களைப் பாடினார்.

இந்த நிலையில், இதனை அங்கே தரிசனத்திற்காக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் உற்சாக மிகுதியில் பக்தர்களும் இணைத்து ஐயப்பனை போற்றி பாடல்கள் பாடினர். இதில் டிரம்ஸ் சிவமணியின் மகளும் சேர்ந்து இசை இசைத்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.