நிபா வைரஸ் பரவல்: கேரள பயணிகளிடம் தீவிர சோதனை! கொட்டும் மழையிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்!

நிபா வைரஸ் பரவல்: கேரள பயணிகளிடம் தீவிர சோதனை! கொட்டும் மழையிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்!
Nipah virus testing in tamilnadu kerala border: நிபா வைரஸ் பரவல் காரணமாக, நீலகிரி மாவட்டத்திற்கு படை எடுக்கும் கேரள பயணிகளை எல்லை சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி: கேரள மாநிலம் கோழிகோடு உள்ளிட்ட பகுதிகளில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரசுக்கு இதுவரை 2 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. தற்போது நிபா வைரஸ் இறப்பு விகிதம் 40 - 70 சதவீகிதம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ள காரணத்தால் மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நிபாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக கரோனாவின் பேச்சு இல்லாமல் இருந்த நிலையில், அந்த இடைவேளையை நிறைவு செய்யும் விதமாக டெங்கு வந்துவிட்டது. நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேரளா வழித்தடங்களிலும் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் நிபா வைரஸ் பரவலை தடுக்க கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்றும், கேரளாவில் இருந்து வருபவர்களிடம் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். நிபா வைரஸ் எதிரொலியால் கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் முக்கிய வழித்தடங்களான களியக்காவிளை, கோழிவிளை, காக்காவிளை, பளுகல் மற்றும் நெட்டா ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து சுகாதார ஆய்வாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் அதிகளவிலான கேரள வாகனங்கள் நீலகிரி மாவட்டம் நோக்கி படையெடுப்பதால், தமிழ்நாடு எல்லைப்பகுதியான காணி மற்றும் அதன் எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு டெங்கு வார்டுகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
