ETV Bharat / bharat

‘கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை’ - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 8:35 PM IST

கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை
கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

Nipah virus cases: கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு (கேரளா): கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 42 நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் முடிவில், புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. சில மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் முடிவுகள் வெளியாகும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நிபா வைரஸ் கேரள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அந்த வைரஸின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. நிபா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 42 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதன் முடிவுகள் எதிர்மறையாக வந்த நிலையில், புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. இன்று காலை மேலும் சிலரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிய உறவில் அதிகமானோர் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தொலைபேசி மூலமாக அழைத்தபோது, அவர்கள் அங்கு இல்லை என்று மறுக்கிறார்கள். எனவே, அவர்களின் மொபைல் டவர் இருப்பிடங்கள் மூலம் ஆராய்ந்து, பாதிக்கப்பப்ட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய காவல் துறையினரின் உதவியை நாடியுள்ளோம்.

இதற்கிடையில், மத்தியக் குழு 2018-இல் நிபா வைரஸ் பரவிய பகுதியை ஆய்வு செய்து, அங்கு ஏதேனும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) புனே மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுக்கள் (ICMR) மாவட்டத்திலும் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸின் மரபணு வரிசை முறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வௌவால்கள் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. வௌவால்கள் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் வென்டிலேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒன்பது வயது சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 6 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆய்வுகள், கோழிக்கோடு மட்டுமல்ல, முழு மாநிலமும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.