ETV Bharat / state

தென்காசி: வியாசா கல்லூரியில் நடந்த வேற லெவல் தேர்தல்.. மாணவிகள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

author img

By

Published : Jul 8, 2023, 5:56 PM IST

Etv Bharat
Etv Bharat

வாசுதேவநல்லூர் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகளுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சக மாணவிகள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

வாசுதேவநல்லூர் வியாசா கல்லூரியில் நடந்த தேர்தல்

தென்காசி: வாசுதேவநல்லூரில் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மாணவிகளுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. மாணவர்களிடம் இருந்தே அடுத்த தலைமுறைக்கான அரசியல் தலைவர் உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் நடைபெற்ற இந்த தேர்தலில் மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களுக்கான தலைவரை தேர்வு செய்ய வாக்களித்தனர்.

9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கண்காணிப்புடன் அசல் தேர்தல் போலவே இந்த தேர்தல் நடைபெற்றது. அது மட்டுமின்றி இந்த தேர்தல் சரியான முறையில் முறைகேடு நடைபெறாத வகையில் நடக்கிறதா என்பதை ஆராயவும் தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் சுமார் 33 மாணவிகள் போட்டியிட்ட நிலையில் 29 மாணவிகள் டெபாசிட் இழந்தனர். செல்வி ஹரிஸ்மிதா என்ற மாணவி பேரவைத் தலைவராகவும், ஆசன்பீவி என்ற மாணவி உதவித் தலைவராகவும், கார்த்திகா என்ற மாணவி விளையாட்டு துறை செயலாளராகவும், ஸ்வேதா என்ற மாணவி உதவி செயலாளராகவும் கணிசமான ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றனர். இந்த மாணவிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வைத்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழும் விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் தான் அந்த கல்லூரியில் அதிகம் பயின்று வருகின்றனர். இந்த மாணவிகளை பல்வேறுதுறைகளில் சிறந்தவர்களாக மாற்றும் நோக்கில் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த கையில் மாணவிகளில் இருந்து அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்த தேர்தல் மாணவிகளின் பெற்றோர் மற்றும் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இது குறித்து பேசிய கல்லூரி மாணவிகள், "தங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டும் இதேபோன்று தேர்தல் நடத்தப்பட்டதாகவும், அப்போதைய மாணவிகளின் தலைவர் கல்லூரியை சிறந்த முறையில் வழிநடத்தி சென்றதாகவும் தெரிவித்தனர். தங்களில் இருந்து அரசியல் தலைவர்களை உருவாக்க நினைக்கும் கல்லூரி நிர்வாகத்தின் முயற்சி மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த மாணவிகள், தேர்தல் மிக நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் முனைப்புக்காட்டியதாகவும்" கூறினார்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அதற்கான ஆவணம் இன்று வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவிகளின் தேவை அறிந்தும் செயல்பட வேண்டும் என சக மாணவிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சக மாணவிகள் வாழ்த்துக்கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விசிட்.. விமான நிலையத்தில் மல்லுகட்டிய அதிமுகவினரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.