விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி; சினிமா பாணியில் துரத்தி பிடித்த ஆட்சியர்!

விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி; சினிமா பாணியில் துரத்தி பிடித்த ஆட்சியர்!
Sankagiri accident: சேலம் மாவட்டம் சங்ககிரியில் அதிகளவு பாரம் ஏற்றி வந்த லாரி, வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம்: சங்ககிரி மெய்யனபாளையத்தான் காட்டைச் சேர்ந்தவர் சக்திவேலின் மினி வேனில், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 43), அவரின் சகோதரரான மாற்றுத்திறனாளி பழனி (வயது 45), அவர்களின் உறவினர்கள் நான்கு பேர், 40 செம்மறி ஆடுகளை வாங்கிக் கொண்டு திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். நேற்று மதியம் 12 மணி அளவில் சங்ககிரி அருகே மோடிக்காடு பஸ் ஸ்டாப் அருகே வந்துள்ளனர்.
அப்போது சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பவர் லாரியில் எதிரே வந்தார். அதிக அளவு வைக்கோல் போரை ஏற்றிக்கொண்டு வந்த மணிகண்டனது லாரி, வேனின் பின்புறம் மோதியது. இதனால் வேனின் பின்புறம் அமர்ந்திருந்த பழனி படுகாயம் அடைந்தார். மேலும் லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். அச்சமயத்தில் திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி செல்வதற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்த விபத்து நடந்ததை பார்த்துவிட்டு, காயம் அடைந்தவரை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். பின் நிற்காமல் சென்ற லாரியை விரட்டிச் சென்று சுற்றி வளைத்து பிடித்தார். அதனை அடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், லாரியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சங்ககிரி போலீசார் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்தனர்.
இதையடுத்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கார்மேகம், விபத்தில் படுகாயம் அடைந்த பழனியை சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். லாரியில் அதிக பாரம் ஏற்றியது குறித்து வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விசாரணை நடத்தினர்.
