நகர்கோவில் - மும்பை ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில பயணிகள் மீது ரயில்வே போலீஸ் வழக்கு!

நகர்கோவில் - மும்பை ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில பயணிகள் மீது ரயில்வே போலீஸ் வழக்கு!
southern railway salem: நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கியதாக வடமாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
சேலம்: நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்(16340) நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வழியாக வந்தது. இந்த ரயிலில் உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த வினோத் குமாா் (வயது 34) என்ற பயணச்சீட்டு பரிசோதகா் மதுரை ரயில் நிலையத்தில் ஏறினாா். அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு பெட்டியாக பயணிகளிடம் பரிசோதனை செய்து வந்தார்.
இந்நிலையில், ரயில் நாமக்கல் அருகே வந்து கொண்டிருந்த நிலையில் எஸ் 6(S6) பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் பயணச்சீட்டு விவரத்தை சரிபார்த்து வந்தார். அப்போது மதுரையில் இருந்து நாசிக்கிற்கு பயணம் செய்த எஸ்.ஆர்.சாங்லே என்ற பயணியிடம் பரிசோதனை செய்தார். அப்போது, அவர் முன்பதிவு செய்த பயணச்சீட்டில் ஒருவர் பயணம் செய்யவில்லை என தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, பயணம் செய்யாத நபரின் இருக்கைக்கு வேறு ஒருவருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய பரிசோதகா், நாசிக்கிற்கு பயணம் செய்த பயணிக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நாசிக்கை சோ்ந்த துக்காராம் (வயது 60), கோவா்தன் லால் (வயது 42), எஸ்.ஆா்.சாங்லே (வயது52), கைலாஷ் சாங்லே (வயது63) ஆகியோா் பரிசோதகா் வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் டிக்கெட் பரிசோதகருக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, பயணச்சீட்டு பரிசோதகா் வினோத் குமாா், சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தாா். இந்நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்த நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், ரயில்வே போலீசார் ஆகியோா் ஏறி பரிசோதகா் வினோத் குமாரை தாக்கிய 4 பேரை ரயிலில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தனா்.
இந்நிலையில், இவா்களுடன் பயணம் செய்த நாசிக்கைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட ஏராளமானோர் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நீண்ட நேரத்திற்கு பிறகு நான்கு பேரையும் ரயிலில் இருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தி, பின்னா் அவா்களை போலீசார் ரயிலில் அனுப்பி வைத்தனா்.
இதனால் நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ், சேலம் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் காலதாமதமாக, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக, பயணச்சீட்டு பரிசோதகர் வினோத்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் , அடித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
