ETV Bharat / state

Salem Accident: சேலம் சங்ககிரி வேன் விபத்தில் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 2:59 PM IST

சேலம் சங்ககிரி அருகே கடந்த 6-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேன் ஓட்டுநர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சங்ககிரி போக்குவரத்து துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை
சேலம் சங்ககிரியில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்து

சேலம்: சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஆம்னி ஓட்டுநர் விக்னேஷ் இறந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி, காமராஜர் காலனி மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகள் பிரியாவுக்கும் (வயது 25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

கடந்த 5ஆம் தேதி பழனிசாமி குடும்பத்தினர் அவரது உறவினர்களுடன் சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு வேனில் சென்றுவிட்டு மீண்டும் பெருந்துறைக்குச் செல்லும் பொழுது மகள் பிரியாவையும், பேத்தி சஞ்சனாவையும் அவர்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: ஜி20 உச்சி மாநாடு எதிரொலி.. பசுமை திட்டத்தை முன்னெடுத்து விதை பந்துகளை தூவிய இந்திய கடற்படை!

இந்நிலையில், ஆம்னி வேனை விக்னேஷ் (வயது 20) என்பவர் ஓட்டியுள்ளார். ஆம்னி வேன் 6 ஆம் தேதி அதிகாலை சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் நான்கு சாலை பகுதியில் சேலம்- கோவை தேசியநெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில், பிரியாவின் தந்தை, பழனிசாமி(வயது50), தாயார் பாப்பாத்தி(வயது 45), தாய்மாமன் ஆறுமுகம்(வயது49), அவருடைய மனைவி மஞ்சுளா(வயது38), மற்றொரு மாமன் செல்வராஜ்(வயது 55), குழந்தை சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும், பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், நேற்று (செப்.9) இரவு ஆம்னி வேன் ஓட்டுநர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சங்ககிரி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் எந்த வகை வாகனங்களையும் நிறுத்தக் கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், சங்ககிரி போக்குவரத்து துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நடவடிக்கையில், விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 80 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரங்கிமலை ராணுவ மையத்தில் பயிற்சி நிறைவு.. 197 வீரர்கள் இந்திய ராணுவத்தில் இணைந்தனர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.