ETV Bharat / state

'கிராமங்கள் தோறும் உங்களைத் தேடி தடுப்பூசி முகாம்' அமைச்சர் தகவல்!

author img

By

Published : May 23, 2021, 12:01 PM IST

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து கிராமங்கள் தோறும் உங்களைத் தேடி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், தினந்தோறும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போது மாவட்டத்தில் 2,400 பேர் வரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (மே.22) ஒரே நாளில் மட்டும் 423 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட எம்எல்ஏ முத்துராஜா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் அவர் மருத்துவராக இருப்பதால், பொது மக்களுக்கு அவரே தடுப்பூசி போட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறுகையில், "தடுப்பூசி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காகக் கிராமங்கள் தோறும் உங்களைத் தேடி தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

கரோனா தொற்று முற்றிய நிலையில், பொது மக்கள் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களை காப்பாற்றுவது, சிகிச்சை அளிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது.

எனவே பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்களுக்கு அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்து கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு கிடையாது. அரசு மருத்துவக் கல்லூரியில், ஏற்கனவே 320 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளாகவுள்ளன. தற்போது அவை 600ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கைகளை ஏற்படுத்துவதற்காக, ஏற்கனவே செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தில் சிலிண்டர் ஆக்ஸிஜன் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையமாக மாறிய தனியார் கல்லூரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.