ETV Bharat / state

நாமக்கலில் பெண்களுக்கான ஜல்லிக்கட்டு - கோழியைப் பிடித்து வென்றவர்களுக்கு பரிசு

author img

By

Published : Jan 18, 2023, 6:31 PM IST

Etv Bharat
Etv Bharat

Modern jallikattu for Women and Children: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் குழந்தைகள், பெண்கள் மட்டுமே பங்கேற்ற கோழி பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.

நாமக்கலில் பெண்களுக்கான ஜல்லிக்கட்டு - கோழியைப் பிடித்து வென்றவர்களுக்கு பரிசு

Modern jallikattu for Women and Children: நாமக்கல்: திருச்செங்கோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொண்ட கோழி பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று (ஜன.18) நடைபெற்றன. இந்தப் போட்டியில் குழந்தைகள், பெண்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

'ஜல்லிக்கட்டு' என்றாலே ஆண்களுக்கு மட்டும்தானா? ஏன் எங்களுக்கு இல்லையா என்று மிகவும் நேர்த்தியாக திருச்செங்கோடு பகுதியில் பெண்களுக்கான ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. இதனைக் கேட்ட எல்லோருக்கும் அதென்ன? பெண்களுக்கான ஜல்லிக்கட்டு எனக் கேள்வி எழுத்தொடங்கி இருக்கும். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் நவீன ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

பொதுவாக, ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளை அடக்கி வருகின்றனர். பெண்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு திடலில் வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பர்.

போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும். அந்த கயிறின் மற்றொரு முனை கோழியின் ஒரு காலில் கட்டப்படும் வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதே விதிமுறை. குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதும் கோழியை பிடிக்கச் செல்லும்போது, வட்டத்தைத் தாண்டி சென்றுவிட்டாலோ (அ) குறிப்பிட்ட நேரத்திற்குள் கோழியைப் பிடிக்காமல் இருந்தாலோ அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதப்படுவர். குறிப்பிட்ட கால நேரத்திற்குள் வட்டத்தைத் தாண்டாமல், கோழியைப் பிடிப்பவர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் வெற்றியாளர்களாக கருதப்படுவர்.

இந்தப் போட்டியில் குழந்தைகள், பெண்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கோழியைப் பிடித்தனர். மாடுகளை பிடிப்பது ஜல்லிக்கட்டு போட்டி என்றால் கோழியைப் பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டு போட்டி என புதுவிளக்கம் தருகின்றனர், விழாக்கமிட்டியினர். இந்த போட்டிக்கு திருச்செங்கோடு பகுதியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா தொற்று கெடுபிடிகளால் இந்தப் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த விளையாட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. வீரத்திற்கு ஜல்லிக்கட்டுப் போட்டி என்றால் விவேகத்திற்கு இந்த நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி என்றால் அது மிகையாகது.

இதுகுறித்து இந்தப் போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, 'ஆண்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு காளையை அடக்கி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள், குழந்தைகள் என தாங்களும் அத்தகைய ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வருகிறோம். ஆகையால், இங்கு எங்களால் முடிந்த வகையில் இந்த நவீன ஜல்லிக்கட்டுப் போட்டியை குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று எங்களது பகுதியில் இந்த நவீன ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இந்தப் போட்டி எப்படியென்றால், ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள் போட்டியாளர்களை நிறுத்தி விடுவர். வட்டத்திற்குள் உள்ள பெண் போட்டியாளர்களின் காலில் கயிற்றின் ஒரு முனை கட்டப்படும். பின், அதன் மறுமுனை கோழியின் ஒரு காலில் கட்டப்படும்.

தொடர்ந்து, போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியாளர் வட்டத்தை தாண்டாமல் கோழியை குறிப்பிட்ட நேரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்பது விதி. இந்தப் போட்டியில் பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் கலந்துகொண்டு விளையாடி வருகிறோம். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்' என்று கூறினார்.

மேலும், இதனை அப்பகுதியினர் பெண்களுக்கான ஜல்லிக்கட்டு என்று கூறுகின்றனர். கண்களில் துணி, காலில் கயிறு, மறுமுனையில் கோழி, அதற்கும் மேல் எல்லையாக வட்டம் எனக் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடக்கும் இந்த விளையாட்டு கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியைப் போன்றதேயாகும்.

இதையும் படிங்க: Banana Throwing Festival: வத்தலக்குண்டு அருகே 'வாழைப்பழ சூறைத் திருவிழா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.