ETV Bharat / state

Pattanapravesham: மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்க முடியாது! பட்டணப்பிரவேசத்திற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

author img

By

Published : Jun 10, 2023, 8:00 PM IST

political-parties opposes dharmapuram dhinam pattanapiravesam
மனிதர்களுக்குள் இருக்க வேண்டிய சமத்துவத்தை அளிக்கும் விதமாக நடத்தப்படும் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி

மனிதர்களுக்குள் இருக்க வேண்டிய சமத்துவத்தை அளிக்கும் விதமாக நடத்தப்படும் பட்டணப்பிரவேச நிகழ்ச்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதால் மடத்தை சுற்றி 360க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ள பட்டணப்பிரவேசம் நிகழ்வில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமாரிடம் மனு அளித்தனர். அனுமதி அளிக்கப்படாவிட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன மடத்தை சுற்றி 360க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்வான பட்டணப்பிரவேசம் நாளை இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டணப்பிரவேசம் நிகழ்வில் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை அப்பகுதி மக்கள் சிவிகை பல்லக்கில் அமர்த்தி ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வருவதும், அப்போது ஆதீனகர்த்தர் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவதும் வழக்கம்.

கடந்த ஆண்டு திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் மனிதனை மனிதன் தூக்கி செல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடைவிதிருந்தது. மத வழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதித்ததற்கு இந்து அமைப்பினர், பக்தர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதன் பின் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு தருமபுர ஆதீன கர்த்தரின் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி கோலாகலமாகக் கடந்த ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு அமைப்புகளும் பட்டணப்பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வனுமதி கேட்டு உள்ளது, அனுமதி வழங்கப்படாவிட்டாலும் அவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன் ஏற்பாடாக மடத்தை சுற்றி பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா தேரோட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.