ETV Bharat / state

லோன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளைஞர்கள் கைது

author img

By

Published : Aug 26, 2022, 7:30 AM IST

லோன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பட்டதாரி இளைஞர்கள் அடங்கிய கும்பலை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லோன் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளைஞர்கள் கைது
லோன் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளைஞர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மணிகண்டன் (36). இவர் மரவாடியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என அறிமுகப்படுத்தி செல்போனில் தொடர்பு கொண்ட நபர், மணிகண்டனுக்கு ரூ.2 லட்சம் தனிநபர் கடன் தருவதாக கூறியுள்ளார்.

அதேநேரம் இந்த கடனை பெறுவதற்கான ‘லோன் பிராசஸிங்’ கிற்கு முதல் தொகையாக ரூ.8000ஐ வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். உடனடியாக மணிகண்டன் 8,000 ரூபாயை அனுப்பியதைத் தொடர்ந்து, மறுநாள் ரூ.7340 அனுப்பச் சொல்லியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பல மொபைல் எண்களில் இருந்து பலர் மணிகண்டனை தொடர்பு கொண்டு கேட்டதையடுத்து, லோன் தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மொத்தம் ரூ.67,880ஐ குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இருப்பினும் மணிகண்டனுக்கு லோன் கிடைக்கவில்லை.

இதனையடுத்து இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத்தரும்படி கேட்டதற்கு மணிகண்டன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.10,000 கட்டவேண்டும் என கேட்டு அக்கும்பல் பணத்தை வாங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா செய்தியாளர் சந்திப்பு

இதன் பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐடி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதைத்தொடர்ந்தும் பலமுறை சிறுக சிறுக வாங்கியதன் அடிப்படையில் மொத்தமாக ரூ.1,12,780 செலுத்தியுள்ளார், மணிகண்டன். இறுதியாக தான் முழுமையாக ஏமாந்ததும் தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்ந்த மணிகண்டன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் காட்டுமன்னார்கோயிலில் பதுங்கியிருந்த மூன்று நபர்களை பிடித்த தனிப்படை காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த சஞ்சய்(22), சித்தார்த்தன் (20) மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம்(25) ஆகியோர்தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த தனிப்படை காவல்துறையினர், மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்து லேப்டாப், ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட 16 செல்போன்கள் மற்றும் 28 சிம் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேலும், இவர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரம் இந்த கும்பலில் மேலும் சிலர் இணைந்துள்ளதும், அவர்கள் தப்பி ஓடியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

எனவே தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த அமர்நாத் மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதில் மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மோசடியில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவணங்களை கொடுக்கவோ அல்லது அறிமுகம் இல்லாத செல்போன் எண்கள் மூலம் லோன் கொடுப்பதாக கூறுவதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

இதையும் படிங்க: ஹலோ நான் டிஜிபி பேசுறேன்...போலீஸ் அதிகாரியிடமே 7.5 லட்ச ரூபாய் ஆன்லைனில் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.