ETV Bharat / state

செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையில் இருக்கும் திமுக அமைச்சர்கள்... எச்.ராஜா வார்னிங்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 10:28 PM IST

கண்டன ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா ஆவேசம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா ஆவேசம்

H.Raja criticize DMK: கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கண்டித்தும் அதற்கு துணை போகும் திமுக அரசை கண்டித்தும் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா ஆவேசம்

மயிலாடுதுறை: கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கண்டித்தும் அதற்கு துணை போகும் திமுக அரசை கண்டித்தும் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமுக அரசை வன்மையாக கண்டித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதியில், தமிழகத்திற்கு முறைப்படி வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்காமல் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், அதன் கூட்டணி கட்சியான திமுக அரசை கண்டித்தும், கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை கட்டக்கோரியும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பொறுப்பாளர் தங்க வரதராஜன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். இதில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எச்.ராஜா பேசியதாவது, “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் சிவக்குமார் இல்லத்திற்கு சென்று விருந்து சாப்பிட்டார். ஆனால் விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என அவர் கேட்கவில்லை. கர்நாடகாவில் பேசி தண்ணீர் கேட்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுக்கிறார். 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த போது கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தவரை காவிரி பிரச்சனை வரவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது முதல், காவிரி பிரச்சனையால் டெல்டா விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1967, 68 ஆம் ஆண்டிலேயே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் தேவைகளுக்காக அவர்கள் அணை கட்டுகின்றனர் என்றார். தமிழகத்திற்கு திமுக நல்லது நினைக்கவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் வரை அல்லது திமுக அரசை நீக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

மேலும், இது தொடர்பாக டெல்டா பகுதியில் பந்த் நடத்தப்படும் என்றும் பாஜக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார். அதிலும் நான் பங்கேற்பேன். 820 கோடி கிராவல் கடத்தல் 41 கோடி வங்கி லாக்கரிலும் வைத்துள்ள அமைச்சர் பொன்முடி கொஞ்சம் அடங்கிப் போக வேண்டும். அதிகமாக பேசினால் அதற்கு வில்லங்கம் வந்துவிடும்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பு எடுத்தது போல் அடுத்தடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர். கொள்ளிடத்தில் வெள்ள மணல் பகுதியில் தடுப்பணை கட்ட ரூ‌.750 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அந்தக் கமிட்டியில் பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம், அகோரம் ஆகியோரை நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஆஜராகாத அமலாக்கத்துறையால் வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.